60 ஆயிரம் பேர் மீட்பு- இன்னும் 10 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர்: இமாச்சல் முதல்வர் தகவல்
- இந்திய விமானப் படையின் முயற்சிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- மணாலியில் மொபைல் நெட்வொர்க் இணைப்பு மீட்டமைக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளக்காடானது.
இதற்கிடையே, கடந்த 3 நாட்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இமாச்சல பிரதேசம் மிக மோசமாக பாதிப்பு அடைந்துள்ளது. 1,300 சாலைகள் சேதமடைந்துள்ளன. 40 பாலங்கள் சிதைந்துள்ளன. 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின. 333 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. வெள்ள, நிச்சரிவில் சிக்கி இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, சுற்றுலாத் தளங்களில் பயணிகள் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், பயணிகளை மீட்பதற்கான உரிய நடவடிக்கையை இமாச்சல் அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவித்த 60,000 சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று காலை 9 மணி வரை, மொத்தம் 60,000 சுற்றுலாப் பயணிகள் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நான் தற்போது குலுவில் கடந்த மூன்று நாட்களாகத் தங்கி, நடந்து வரும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறேன்.
சாலை சேதம் காரணமாக கசோல் மற்றும் தீர்த்தன் பள்ளத்தாக்கில் சுமார் 10,000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
சாலை சேதமடைந்த இடத்திலிருந்து டிரான்ஸ்- ஷிப்மென்ட், ஜீப்கள் மற்றும் பேருந்துகள் மூலம் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை எளிதாக்கி உள்ளோம்.
தற்போதைய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இந்திய விமானப் படையின் முயற்சிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீவிர மற்றும் சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அவர்கள் ஏழு நபர்களை காப்பாற்றுவதன் மூலம் விதிவிலக்கான திறமையை வெளிப்படுத்தினர்.
மணாலியில் மொபைல் நெட்வொர்க் இணைப்பு மீட்டமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.