இந்தியா

800-க்கும் மேற்பட்டோருக்கு எச்ஐவி பாதிப்பு: எல்லோரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்.. அதிர்ச்சி

Published On 2024-07-10 06:57 GMT   |   Update On 2024-07-10 06:57 GMT
  • திரிபுராவில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டது.
  • எச்ஐவி பாதிக்கப்பட்ட 572 மாணவர்கள் உயிருடன் உள்ளனர், 47 பேர் உயிரிழந்தனர்.

எச்.ஐ.வி. என்று அழைக்கப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் நோய் மிகவும் கொடிய மற்றும் வேகமாக பரவும் வைரஸ் ஆகும். உலகம் முழுவதும் உள்ள மிக கொடிய நோய்களில் எச்.ஐ.வி.யும் ஒன்று. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 828 மாணவர்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திரிபுராவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, திரிபுரா எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அம்மாநிலத்தில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டது.

சோதனையை தொடர்ந்து இந்த கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களிடையே பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் 828 மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மூத்த அதிகாரி கூறுகையில்,

திரிபுரா மாநிலத்தில் மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் எச்.ஐ.வி பாசிட்டிவ் உள்ள 828 மாணவர்களை நாங்கள் இதுவரை மீட்டுள்ளோம். அவர்களில் 572 மாணவர்கள் உயிருடன் உள்ளனர், 47 பேர் உயிரிழந்தனர்.

பல மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பிரபல பல்கலைக்கழகங்களுக்கு இங்கிருந்து படிக்க சென்றிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்ப அறிவுறுத்தி இருக்கிறோம்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு போதை பழக்கம் இருந்திருக்கிறது. அதாவது, ஒரே ஊசியை பலர் பயன்படுத்தியுள்ளனர். இதனால்தான் தொற்று பரவியிருக்கிறது. எனவே அனைவரையும் கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளோம்.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் இருவரும் அரசு பணிகளில் இருக்கின்றனர். தங்கள் பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் தயங்குவதில்லை. தங்கள் பிள்ளைகள் போதைப்பொருளுக்கு இரையாகிவிட்டனர் என்பதை பெற்றோர் உணர தாமதமாகி விடுகிறது, என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News