பாராளுமன்றத்தில் பேச அனுமதித்தால் பதில் அளிப்பேன்: ராகுல்காந்தி பேட்டி
- பாராளுமன்றத்தில் பேச அனுமதித்தால் பேசுவேன்.
- நான் பேசுவது பா.ஜனதா விரும்புவதுபோல் இருக்காது.
புதுடெல்லி :
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளிநாட்டில் இருந்து திரும்பினார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
நான் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்தேன். என் மீது 4 மந்திரிகள் குற்றம் சாட்டி இருப்பதாகவும், அவற்றுக்கு பதில் அளிக்க எனக்கு உரிமை இருப்பதாகவும் அவரிடம் கூறினேன்.
எனவே, வெள்ளிக்கிழமை (இன்று) பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
அங்கு பேச அனுமதி கிடைக்குமா என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒரு எம்.பி. என்ற முறையில், முதலில் பாராளுமன்றத்தில் பதில் சொல்வதுதான் எனது கடமை. அதன்பிறகு ஊடகங்களிடம் பேசுகிறேன்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், அதானி விவகாரம் தொடர்பாக நான் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி இன்னும் பதில் அளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, நேற்று பிற்பகலில் சபாநாயகர் ஓம்பிர்லாவை ராகுல்காந்தி சந்தித்தார். சபையில் பேச அனுமதி கோரினார். பாராளுமன்ற கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
சபை ஒத்திவைப்புக்கு பிறகு வெளியே வந்த அவரிடம், 'மன்னிப்பு கேட்பீர்களா?' என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி புன்னகையையே பதிலாக தந்தார். அவர் மேலும் கூறியதாவது:-
நான் நாட்டுக்கு எதிராகவோ, பாராளுமன்றத்துக்கு எதிராகவோ எதுவும் பேசவில்லை. பாராளுமன்றத்தில் பேச அனுமதித்தால் பேசுவேன். அனுமதிக்காவிட்டால், வெளியே பேசுவேன். நான் பேசுவது பா.ஜனதா விரும்புவதுபோல் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.