அரியானாவில் கடந்த தேர்தலில் கிங் மேக்கராக இருந்தவர் மண்ணை கவ்வினார்
- சட்டசபை தேர்தலிலும் ஜே.ஜே.பி கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
- துஷ்யந்த் சவுதாலா 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அரியானா மாநிலம் உச்சன கலன் சட்டசபை தொகுதியில் முன்னாள் துணை முதல்- மந்திரியும், ஜனநாயக கட்சி தலைவருமான (ஜே.ஜே.பி) துஷ்யந்த் சவுதாலா போட்டியிட்டார். இன்று ஓட்டு எண்ணிக்கையின் போது இத்தொகுதியில் இவர் தோல்வி முகத்தில் உள்ளார். அத்தோடு அவர் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பீரேந்திரசிங் முன்னிலையில் இருந்து வருகிறார். 2- வது இடத்தில் பா.ஜ.க.வும், அதற்கு அடுத்தபடியாக 3- வது இடத்தில் ஆம் ஆத்மி கட்சியும் உள்ளது. துஷ்யந்த் சவுதாலா தொடர்ந்து பின் தங்கி உள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இவர் இதே தொகுதியில் 92 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதோடு மட்டுமல்லாது கிங் மேக்கராகவும் உருவெடுத்தார்.
சென்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது.
ஜனநாயக ஜனதா கட்சி கடந்த தேர்தலில் 87 தொகுதிகளில் போட்டியிட்டு 10 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்ததால் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்- மந்திரியானார்.
ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜனநாயக ஜனதா கட்சி விலகியது. இதனால் துணை முதல்-மந்திரி பதவியையும் துஷ்யந்த் சவுதாலா இழந்தார்.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதால் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக ஜனதா கட்சி தோல்வியை சந்தித்தது.
இதன் தொடர்ச்சியாக இந்த சட்டசபை தேர்தலிலும் ஜே.ஜே.பி கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. கடந்த தேர்தலில் கிங் மேக்கராக இருந்த துஷ்யந்த் சவுதாலா இத்தேர்தலில் மண்ணை கவ்வி உள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.