இந்தியா

இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் உள்ளது

Published On 2024-07-22 08:30 GMT   |   Update On 2024-07-22 08:30 GMT
  • கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.
  • பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கிறது

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமர்பித்தார்.

பட்ஜெட்டுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்த விரிவான தகவல்களை வழங்குகிறது. அடுத்த நிதியாண்டிற்கான அரசி்ன் கொள்கை முன்னுரிமைகளையும் பிரதிபலிக்கிறது.

பொருளாதார ஆய்வறிக்கையில் இடம் பெற்று உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இந்தியாவின் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளர்ச்சி காணும். நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகி வருகிறது.


தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படுகின்றன. நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

மோசமான காலநிலையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. நாட்டின் பணவீக்கம் 4.5 சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளது.

கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. 2020 நிதி ஆண்டை விட 2024-ம் ஆண்டில் உண்மையான ஜி.டி.பி. 20 சதவீதம் உயர்ந்துள்ளது. 2025-ம் நிதி ஆண்டில் வலுவான வளர்ச்சி இருக்கும்.

உலகளாவிய பிரச்சனைகள், வினியோக சங்கிலியில் குளறுபடி, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் பணவீக்கம் திறமையாக கையாளப்பட்டது. இதனால் 2023-ம் நிதி ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் 2024-ம் ஆண்டில் 5.4 சதவீதமாக குறைந்துள்ளது.

நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு நீண்ட காலம் தெளிவான முன்னோக்கி செல்லும் திட்டம் தேவை. பணவீக்கம் 2025-ம் ஆண்டு 4.5 சதவீதம் ஆகவும், 2026-ம் ஆண்டு 4.1 சதவீதமாகவும் குறையும் என்று ஆர்.பி.ஐ. கணித்து உள்ளது. அதேபோல் 2024-ல் 4.6 சதவீதமாகவும் 2025-ல் 4.2 சதவீதமாகவும் இந்தியாவில் பணவீக்கம் இருக்கும் என்று ஐ.எம்.எப். கணித்து இருக்கிறது.

பெரும்பாலான மாநிலங்களில் விலைவாசி குறைந்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் வேளாண் துறையின் நிலையான வளர்ச்சி 4.18 சதவீதமாக இருக்கிறது. 2023-24-ல் வேளாண் துறை தற்காலிக வளர்ச்சி 1.4 சதவீதமாக உள்ளது.

பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கிறது. இதில் தொழிற்துறையே முக்கிய பங்கு வகிக்கிறது. 9.5 சதவீத தொழிற்துறை வளர்ச்சி இதற்கு காரணமாகும்.

வேலை வாய்ப்பு சந்தை கடந்த 6 ஆண்டுகளாக மேம்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News