இந்தியா

கொரோனா கால கட்டத்தில் சேகரிக்கப்பட்ட 81.5 கோடி இந்தியர்களின் தகவல்கள் கசிந்ததால் பரபரப்பு

Published On 2023-10-31 07:27 GMT   |   Update On 2023-10-31 07:27 GMT
  • ‘பி.டபிள்யூ. என். 0001’ என்ற ஒரு ஹேக்கர் மூலம் இந்த கசிவு விவகாரம் வெளிகொண்டு வரப்பட்டு உள்ளது.
  • தரவுகள் கசிவை அமெரிக்க ஏஜென்சியான ரெசெக்யூரிட்டி கண்டு பிடித்தது.

புதுடெல்லி:

கொரோனா கால கட்டத்தின் போது நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்காக அவர்களது பெயர், ஆதார் எண் உள்ளிட்ட தரவுகள் பெறப்பட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன.

இந்நிலையில் 81.5 கோடி இந்தியர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் கசிந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'பி.டபிள்யூ. என். 0001' என்ற ஒரு ஹேக்கர் மூலம் இந்த கசிவு விவகாரம் வெளிகொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கொரோனா சோதனையின் போது சேகரித்த தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அந்த ஹேக்கர் கூறும்போது, திருடப்பட்ட தகவல்களில் ஆதார், பாஸ்போர்ட் விவரங்கள், கோடிக்கணக்கான இந்தியர்களின் பெயர்கள், போன் எண்கள், தற்காலிக, நிரந்தர முகவரிகள் உள்ளன. கொரோனா சோதனையின் போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சேகரிக்கப்பட்ட தகவலில் இருந்து இந்த தரவுகள் எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

இந்த தரவுகள் கசிவை அமெரிக்க ஏஜென்சியான ரெசெக்யூரிட்டி கண்டு பிடித்தது. இந்திய குடிமகன் ஆதார் மற்றும் பாஸ்போர்ட் தகவல் உள்பட 81.5 கோடி பதிவுகள் கிடைக்கும் என்று ஹேக்கர் விளம்பரப்படுத்தி உள்ளார்.

இதில் இந்திய குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களுடன் ஒரு லட்சம் கோப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில் கொரோனா சோதனை தகவல்கள், தேசிய தகவல் மையம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சுகாதார அமைச்சகம் போன்ற பல்வேறு அரசாங்க அமைப்புகளில் உள்ளன. இதனால் இந்த தகவல்கள் எங்கிருந்து கசிந்தது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

Tags:    

Similar News