இந்தியா

ஆதித்யா எல்-1 விண்கலம் எல்-1 புள்ளியில் ஜனவரி 6-ந்தேதி நுழையும்: இஸ்ரோ தலைவர்

Published On 2023-12-24 04:50 GMT   |   Update On 2023-12-24 04:50 GMT
  • எல்-1 புள்ளியில் விண்கலம் நுழைவதற்கான கடைசி ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
  • வெற்றிகரமாக எல்-1 புள்ளியில் ஆதித்யா-எல்1 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அங்கு இருக்கும்.

அகமதாபாத்:

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த விண்கலம், பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை 125 நாட்களில் பயணித்த பிறகு, சூரியனுக்கு மிக அருகில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி எல்-1 யைச் சுற்றி ஒரு ஹாலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

ஏற்கனவே ஆதித்யா-எல்1 சூரியனின் முழு-வட்டுப் படங்களை எடுத்து இந்த விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது. தொடர்ந்து அறிவியல் சோதனைகளுக்காக சூரியன் தொடர்பான படங்களை எடுத்து இந்த விண்கலம் அனுப்ப இருக்கிறது. இந்தநிலையில் தற்போது ஆதித்யா எல்-1 விண்கலத்தின் பயணம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் அகமதாபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்வெளி பயணமான ஆதித்யா எல்-1 விண்கலம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. எல்-1 புள்ளியில் விண்கலம் நுழைவதற்கான கடைசி ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற ஜனவரி 6-ந்தேதி (சனிக்கிழமை) அன்று ஆதித்யா எல்-1 புள்ளியில் நுழையும். குறிப்பாக, ஜனவரி 7-ந்தேதிக்குள் இறுதி கட்டப்பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிகரமாக எல்-1 புள்ளியில் ஆதித்யா-எல்1 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அங்கு இருக்கும். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் தேவையான மிகவும் முக்கியமான அனைத்து தரவுகளையும் சேகரிக்கும். சூரியனின் இயக்கவியல் மற்றும் அது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது? என்பதைப் புரிந்துகொள்ள தரவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி `பாரதிய விண்வெளி நிலையம்' என்ற இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்க இஸ்ரோ திட்டம் வகுத்துள்ளது.

இவ்வாறு இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறினார். 

Tags:    

Similar News