இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் சுயசரிதை அடுத்த மாதம் வெளியீடு
- எனது வாழ்க்கை கதையை பிறருக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இது எழுதவில்லை.
- சந்திரயான்-3 விண்கலத்தின் வரலாற்று வெற்றி சமூகத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவராக பதவி வகித்து வருபவர், சோம்நாத் (வயது 59). கேரளாவை சேர்ந்த இவரது பதவிக்காலத்தில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளை ஈட்டி வருகிறது.
நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியது, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் அனுப்பியது, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்ட சோதனை என பல்வேறு சாதனைகள் இவரது தலைமையில் நடந்துள்ளது.
இந்த பணி நெருக்கடியின் மத்தியிலும் அவர் தனது வாழ்க்கை பயணத்தை புத்தகமாக வெளியிட முடிவு செய்து சுயசரிதை எழுதியுள்ளார். இதை கேரளாவை சேர்ந்த லிபி பதிப்பகம் வெளியிடுகிறது.
'நிலவு குடிச்ச சிம்ஹங்கள்' என மலையாளத்தில் பெயரிடப்பட்டு உள்ள இந்த புத்தகம் அடுத்த மாதம் (நவம்பர்) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-
உண்மையை சொன்னால், என்ஜினீயரிங் சேர வேண்டுமா? அல்லது பி.எஸ்.சி. படிக்கணுமா? என்று கூட தெரியாத ஒரு சாதாரண கிராமத்து இளைஞரின் கதைதான் இது.
அவரது குழப்பங்கள், வாழ்க்கையில் அவர் எடுத்த சரியான முடிவுகள் மற்றும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் அவர் பெற்ற வாய்ப்புகள் பற்றி இதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
எனது வாழ்க்கை கதையை பிறருக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இது எழுதவில்லை. மாறாக வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கும்போதும் மக்கள் தங்கள் கனவுகளை எட்டிப்பிடிப்பதற்கு ஊக்குவிப்பதே இதன் ஒரே நோக்கம்.
சந்திரயான்-3 விண்கலத்தின் வரலாற்று வெற்றி சமூகத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. அதன் வெற்றியால் ஏராளமானோர், குறிப்பாக எண்ணற்ற குழந்தைகள் உத்வேகம் அடைந்துள்ளனர் என்பதைக் காண முடிந்தது. இந்தியாவும் இந்தியர்களும் இவ்வளவு பெரிய செயல்களைச் செய்ய முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.
இந்த வரலாற்று வெற்றிதான் என்னை புத்தகம் எழுத தூண்டியது.
பல திறமையானவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் நம்பிக்கையின்மையும் ஒன்றாகும். இதை அவர்களுக்கு வெளிப்படுத்துவதே இந்த புத்தகத்தின் நோக்கம் ஆகும்.
ஏனெனில் நானும் அத்தகைய சூழலை எதிர்கொண்டவன். அதை பல்வேறு நிகழ்வுகள் வழியாக புத்தகத்தில் விவரித்து இருக்கிறேன்.
இவ்வாறு சோம்நாத் கூறினார்.
சுயசரிதையை ஏன் மலையாளத்தில் எழுதினீர்கள்? என்ற கேள்விக்கு, 'நான் ஒரு மலையாளி. அத்துடன் தாய்மொழியில் எழுதுவது வசதியாக உள்ளது' என்று சோம்நாத் பதிலளித்தார்.
இந்த புத்தகத்தில் சோம்நாத்தின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி, இஸ்ரோவின் ராக்கெட் தயாரிப்பு, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3, சந்திரயான்-3 போன்றவற்றின் கதைகளும் விவரிக்கப்பட்டு உள்ளன.