எனது பதவியை அவமதித்தால்... எச்சரிக்கை விடுத்த துணை ஜனாதிபதி
- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து கிண்டலடித்தார்.
புதுடெல்லி:
சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர்போல மிமிக்ரி செய்து கிண்டல் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எம்.பி.க்கள் கண்ணியத்தைக் காக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு வலியுறுத்தினார்.
இந்நிலையில், எனது பதவியை அவமதித்தால் பொறுத்துக் கொள்ள முடியாது என துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஜகதீப் தன்கர் கூறுகையில், காங்கிரஸ் 138 ஆண்டுகள் பழமையான கட்சி என கூறுகிறீர்கள். உங்கள் அமைதியும், கார்கேயின் அமைதியும் எனது காதில் எதிரொலிக்கிறது. என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஒருவர் மிமிக்ரி செய்து கிண்டல் செய்கிறார். ஒருவர் அதனை வீடியோ பதிவு செய்கிறார்.
என்னை தனிப்பட்ட முறையில் அவமதித்தால் சகித்துக் கொள்வேன். ஆனால், துணை ஜனாதிபதி பதவி மற்றும் எனது சமூகத்தை அவமதிப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த அவையின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது என குறிப்பிட்டார்.