இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை: மக்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்
- இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சனை நீண்ட காலமாகவே உள்ளது.
- இதுகுறித்து பாராளுமன்றத்தின் மக்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசினார்.
புதுடெல்லி:
இந்தியா -சீனா இடையிலான எல்லை பிரச்சனை நீண்ட காலமாகவே உள்ளது. எல்லைகள் இதுவரை துல்லியமாக வரையறை செய்யப்படவில்லை. எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு இரு நாட்டு ராணுவமும் அவரவர் பகுதியில் ரோந்து செல்கின்றன.
கல்வான் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இரு நாடுகளின் உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் பாதிக்கப்பட்டது. இருநாட்டு ராணுவத்தினரும், நேருக்கு நேர் மோதும் வகையில் எல்லையில் படைகளை குவித்தனர்.
கடந்த அக்டோர்பர் மாதம் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இருநாட்டு ராணுவத்தினரும், எந்தெந்தப் பகுதியில் ரோந்து செல்வது என ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தின் மக்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:
தூதரக ரீதியில் நடந்து வந்த தொடர் பேச்சுவார்த்தை காரணமாக இந்தியா-சீனா இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எல்லைப் பிரச்சனைக்கு நேர்மையான, சுமூகமான மற்றும் இருதரப்பும் சுமூகமாக ஏற்றுக்கொள்ளும் முடிவை எடுப்பதற்கு தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா உறுதிபூண்டுள்ளது. மீதமுள்ள சிக்கல்களை தீர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
எல்லையில் சீனப்படைகள் குவிக்கப்பட்ட காலத்தில் கடினமான சூழ்நிலையிலும் இந்திய ஆயுதப்படையினர் உடனடியாகவும், விரைவாகவும் பணியாற்றினர் என தெரிவித்தார்.