சிக்கபல்லாபூர் ஈஷா மையத்தில் நாக மண்டபத்தை திறந்துவைத்தார் கர்நாடக முதல் மந்திரி
- கர்நாடக முதல் மந்திரி சிக்கபல்லாபூரில் உள்ள ஈஷா மையத்தில் நாக மண்டபத்தை திறந்து வைத்தார்
- இந்த நாக மண்டபம் அக்டோபர் 10-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிக்கபல்லாபுராவின் புறநகரில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது.
இந்நிலையில், முதல் மந்திரி பசவராஜ் பொம்மை சிக்கபல்லாபுராவின் புறநகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு முன்னிலையில் நாக மண்டபத்தை நேற்று திறந்து வைத்து, ஈஷா அறக்கட்டளையின் ஆன்மீகப் பணிகளை துவக்கி வைத்தார்.
தொடக்க விழாவின் ஒரு பகுதியாக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, சுகாதாரத் துறை மந்திரி கே.சுதாகர் ஆகியோர் ஆரத்தி செய்து மலர்களை அர்ப்பணித்தனர்.
அப்போது பேசிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, மண்ணைப் பாதுகாப்பதற்கான சத்குருவின் சமீபத்திய விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் உலகம் முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. கர்நாடகாவில் விவசாயிகளுக்கு நன்மை தருகின்ற வகையில் மண்ணின் தரத்தைப் பாதுகாக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. சத்குரு நமது விவசாயிகளின் இதயங்களில் இருக்கிறார் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சத்குரு, சிக்கபல்லாப்பூர் அருகே உள்ள மையத்தில் 112 அடி ஆதியோகி சிவன் சிலை, எட்டு நவக்கிரக கோவில்கள் மற்றும் தனித்துவமான பைரவி கோவில் ஆகியவை அமைக்கப்படும். இந்த செயலில் மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும்.
ஒருவரது வாழ்க்கையில் காணப்படாத தடைகளை அகற்றுவதில் நாகத்தின் அருள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே உலகெங்கிலும் உள்ள அனைத்து கலாச்சாரங்களும் பாம்பு வழிபாட்டைக் கொண்டுள்ளன என குறிப்பிட்டார்.
புதிதாக கட்டப்பட்டுள்ள நாக மண்டபம் அக்டோபர் 10-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.