இந்தியா

உத்தரவாத திட்டங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்: கர்நாடக மந்திரி பேச்சால் வெடித்தது விவாதம்

Published On 2024-08-14 10:38 GMT   |   Update On 2024-08-14 10:38 GMT
  • அரசின் நலத்திட்டங்கள் ஏழைகளுக்கு மட்டும் சென்றடைய வேண்டும்.
  • பணக்காரர்களுக்கு வழங்குவதை நிறுத்தினால் 10 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்க முடியும்.

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சில நலத்திட்டங்களை கொண்டு வருவோம் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. அதை காங்கிரஸ் அரசின் உத்தரவாதம் என அழைத்தது.

காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது. சித்தராமையா முதல்வராக பதவி ஏற்றார். தேர்தலின்போது கூறிய உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தியது. இந்த திட்டங்களுக்காக 2024-25-ல் 52 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக அரசின் நலத்திட்டங்கள் ஏழைகளுக்கு மட்டும் சென்றடைகிறதா? என்பது நீண்டகால கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில் அம்மாநில பொதுப்பணித்துறை மந்திரியான சதீஷ் ஜார்கிஹோலி, இந்த திட்டத்தால் ஏழைகள் மட்டும் பயனடைய வேண்டும். பணக்காரர்கள் பயனடையக் கூடாது. இந்தத் திட்டத்தில் இருந்து பணக்காரர்களை நீக்கினால் மாநில கருவூலத்திற்கு ஆண்டிற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என நான் சொல்ல மாட்டேன். ஆனால் மக்கள் இந்த திட்டங்கள் ஏழைகளுக்கு மட்டும் சென்று சேர வேண்டும். பணக்காரர்களுக்கு செல்லக்கூடாது. இது தொடர்பாக ஹோட்டல், ஊழியர்கள் மற்றும் எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது.

அவர்கள் ஏன பணக்காரர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏழைகளுக்கு மட்டும் கொடுக்க வேண்டியதுதானே என எதிர்க்கட்சிகள் கூட பேசிக் கொண்டிருக்கின்றன.

அவற்றை (உத்தரவாதங்கள்) நீக்குவது யார்? நாங்கள் அதை நிறுத்தவில்லை. அதை நேரடியாகச் செய்ய முடியாது. அமைச்சரவை மற்றும் சட்டமன்ற கட்சி உள்ளது. இந்த முடிவுகள் அந்த மட்டத்தில் எடுக்கப்பட வேண்டும், என் மட்டத்தில் அல்ல. கட்சி முடிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

கர்நாடாக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் மந்திரியே இவ்வாறு தெரிவித்திருப்பது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம், 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பட்டப்படிப்பு முடித்து வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் முதல் 1,500 ரூபாய் வரை பணம் வழங்குதல். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களை தலைவராக கொண்ட குடும்பத்தினருக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ உணவு தானியங்கள் ஆகியவை உத்தரவாத திட்டமாகும்.

கர்நாடக மாநில மற்றொரு மந்திரி எம்.பி. பாட்டீல் "இந்த உத்தரவாதங்கள் கட்சியின் கமிட்மென்ட். அவைகள் தொடர்ந்து வழங்கப்படும். மாநிலத்தில் 82 சதவீத பிபிஎல் குடும்பங்கள் உள்ளன. பிபிஎல் குடும்பங்கள் பயன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்." என்றார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. நலத்திட்டங்கள் உரியவர்களுக்கு மட்டுமே சென்றடைகிறதா? என்ற விவாதம் எழுந்துள்ளது.

Tags:    

Similar News