ஆரிப் முகமதுகான் முடியை தொட்டால் கூட கேரள அரசை கலைக்க வேண்டும்- சுப்பிரமணியன் சுவாமி
- நிதியமைச்சரை நீக்க, கேரள முதலமைச்சருக்கு, ஆளுநர் கடிதம்.
- ஆரிப் கோரிக்கையை நிராகரித்தார் பினராயி விஜயன்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான், மாநில அரசுக்கும் இடையே உச்சகட்ட மோதல் நீடித்து வருகிறது. ஆளுநரை நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்டோபர் 19 ஆம் தேதி திருவனந்தபுரம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில நிதியமைச்சர் பாலகோபால் பேசியது இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரானதாகவும், பிராந்தியவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாகவும் தமது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதவிப் பிரமாணம் செய்துவைத்தபோது அவர் எடுத்த உறுதிமொழியை மீறுவதாக இது அமைந்துள்ளது. உறுதிமொழியை வேண்டுமென்றே மீறுபவர்கள் பதவியில் இருக்கத் தகுதியானவர்கள் அல்ல. எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை அவசியம் என்று தமது கடிதத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் கே.என்.பாலகோபால் பேச்சில் தவறு இல்லை என்றும், அதனால் அவரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரையும், மத்திய அரசையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை கேரள கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். கேரள ஆளுநரின் ஒரு முடியை தொட்டால் கூட கேரள அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.