மருத்துவ மாணவி தற்கொலையில் கைதான டாக்டர் சிறையில் அடைப்பு
- ரூவைசின் குடும்பத்தினர் 150 பவுன் தங்க நகைகள், 15 ஏக்கர் நிலம், ஒரு ஆடம்பர கார் வரதட்சணையாக தரவேண்டும் என்று கேட்டிருக்கின்றனர்.
- தீவிர விசாரணைக்கு பிறகு டாக்டர் ரூவைசை வஞ்சியூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்த அப்துல் அசீஸ் என்பவரின் மகள் ஷஹானா(வயது26). எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர், திருகூனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
மருத்துவக்கல்லூரி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வந்த அவர், கடந்த 4-ந்தேதி தனது அறையில் மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உடன் படிக்கும் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல தகவல்கள் வெளியாகின.
மாணவி ஷஹானா, தன்னுடன் படித்து வரும் கொல்லம் கருணாகப்பள்ளி பகுதியை சேர்ந்த ரூவைஸ் (27) என்பவருடன் நண்பராக பழகி வந்திருக்கிறார். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்திருக்கிறது.
ஆனால் ரூவைசின் குடும்பத்தினர் 150 பவுன் தங்க நகைகள், 15 ஏக்கர் நிலம், ஒரு ஆடம்பர கார் வரதட்சணையாக தரவேண்டும் என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு ஷஹானாவின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததால், அவர்களது திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
அதில் மனவேதனையடைந்த ஷஹானா தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான டாக்டர் ரூவைஸ் மீது தற்கொலைக்கு தூண்டியது, வரதட்சணை தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.
அதனடிப்படையில் ரூவைஸ் கைது செய்யப்பட்டார். மாணவியை திருமணம் செய்ய முடிவு செய்தது, மாணவி குடும்பத்தினரிடம் வரதட்சணை கேட்டது உள்ளிட்டவைகள் தொடர்பாக அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
தீவிர விசாரணைக்கு பிறகு டாக்டர் ரூவைசை வஞ்சியூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து டாக்டர் ரூவைசை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று பூஜாப்புரா சிறையில் அடைத்தனர்.