இந்தியா

கண்காணிப்பை அதிகரிக்க சபரிமலையில் ஹெலிபேட் அவசியம்- கேரள அரசுக்கு போலீசார் பரிந்துரை

Published On 2023-11-24 05:34 GMT   |   Update On 2023-11-24 05:34 GMT
  • பயங்கரவாத அமைப்புகளும், மாவோயிஸ்ட் குழுக்களும் பக்தர்கள் வேடத்தில் சபரிமலைக்குள் நுழையலாம்.
  • அவசர காலத்தில் சன்னிதானத்தில் இருந்து ஏராளமான மக்களை வெளியேற்ற மாற்றுவழிகளை கண்டு பிடிக்க வேண்டும்.

திருவனந்தபுரம்:

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள்(கார்த்திகை 1-ந்தேதி) முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு வருகின்றனர். கேரள மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதனையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். நாளுக்குநாள் பக்தர்கள் வருகை அதிகரித்தபடி இருக்கிறது.

இந்நிலையில் பாதுகாப்பு விஷயங்களுக்காக கண்காணிப்பை அதிகரிக்கவும், அவசர காலக்கட்டங்களில் பக்தர்களை அவசர அவசரமாக வெளியேற்றவும் வசதியாக சபரிமலையில் ஹெலிபேட் அவசியம் தேவை என்று கேரள அரசுக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.

அதுமட்டுமுன்றி மேலும் பலவற்றையும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு காவல்துறை பரிந்துரைத்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

பயங்கரவாத அமைப்புகளும், மாவோயிஸ்ட் குழுக்களும் பக்தர்கள் வேடத்தில் சபரிமலைக்குள் நுழையலாம். இதனால் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் அவசர கால சூழ்நிலையை முன்னறி வித்து, மாதிரி நடத்தை விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

சன்னிதானத்தில் உள்ள ஓட்டல்களில் 30 முதல் 130 எல்.ஜி.பி. சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதனை கட்டுப்படுத்தி எல்.ஜி.பி. வினியோகத்தை தேவசம்போர்டு கட்டுப் படுத்த வேண்டும். சிலிண்டர்களை பாதுகாப்பாக ஒன்றாக வைப்பதற்கு சேமிப்பு வசதி தேவை.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை விழாக்களுக்கு முனபதிவுமுறையை கொண்டுவர வேண்டும். அவசர காலத்தில் சன்னிதானத்தில் இருந்து ஏராளமான மக்களை வெளியேற்ற மாற்றுவழிகளை கண்டு பிடிக்க வேண்டும்.

கூட்ட நெரிசலை கடடுப்படுத்த சன்னி தானத்தில் அதிக திறந்த வெளி இடங்கள் இருக்க வேண்டும். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சரக்குகளை கொண்டு செல்ல ரோப்-வே அமைப்பு தேவை.

இவ்வாறு கேரள அரசுக்கு காவல்துறை அனுப்பியுள்ள பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News