இந்தியா

பெண் டாக்டர் கொலை- மருத்துவமனை முன்னாள் முதல்வர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

Published On 2024-08-25 08:08 GMT   |   Update On 2024-08-25 08:08 GMT
  • சந்தீப் கோஷ் பல்வேறு நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
  • சந்தீப் கோஷிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை.

கொல்கத்தா:

கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 9-ந்தேதி அங்குள்ள ஆர்.ஜி.கர். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கருத்தரங்கில் இந்த சம்பவம் நடைபெற்றது. கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

பயிற்சி டாக்டரின் கொலையை தற்கொலையாக மாற்ற முயன்றதாக ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் சி.பி.ஐ. கடந்த 16-ந்தேதி முதல் விசாரணை மேற் கொண்டு வருகிறது. நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 100 மணி நேரம் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

சந்தீப் கோஷ் பல்வேறு நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆஸ்பத்திரிக்கு தேவையான உபகரணங்கள் வாங்கியது உள்ளிட்ட பல வகைகளில் அவர் முறைகேடு செய்தது தெரிய வந்தது.

இந்த நிதி முறைகேடு தொடர்பாக சந்தீப் கோஷ் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். சி.பி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 7 பேர் காலை 8 மணி முதல் சோதனையை தொடங்கினார்கள். பெலியா கட்டாவில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய பாதுகாப்பு படையினருடன் சி.பி.ஐ. குழுவினர் காலை 6 மணிக்கே அவரது வீட்டிற்கு சென்று விட்டனர். ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்த பிறகு அவர்கள் உள்ளே சென்று சோதனை நடத்தினார்கள்.

மொத்தம் 14 இடங்களில் அதிரடி சோதனை மேற் கொள்ளப்பட்டது. மருத்துவ மனையில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

அதோடு கல்வி வளாகத்தில் உள்ள உணவகத்துக்கு சென்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர். அவருக்கு நெருக்கமானவர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது .

சந்தீப் கோஷிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் கூறும்போது, பெண் பயிற்சி டாக்டர் கொலையை மறைக்க சந்தீப் கோஷ் தீவிரமாக முயற்சி செய்துள்ளார். இதனால் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராயிடமும் உண்மை கண்டறியும் சோதனையை சி.பி.ஐ. மேற் கொண்டது. அப்போது அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது.

பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்தது யார்? அவரை கொலை செய்தது யார்? கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை முன்கூட்டியே தெரியுமா? எத்தனை பேர் மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் இருந்தீர்கள் என்பது உட்பட 20 கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு சஞ்சய் ராய் அளித்த பதில்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டன.

4 டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News