நாடு முழுவதும் பா.ஜனதாவின், ஆபரேஷன் தாமரை என்ற துர்நாற்றம் வீசுகிறது: குமாரசாமி
- வெள்ளத்தால் இறந்தவர்கள் பற்றி இந்த அரசுக்கு கவலை இல்லை.
- ஏழைகளின் ரத்தமே பா.ஜனதாவின் அதிகார அமிர்தம்.
பெங்களூரு :
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நாகமங்களாவில் எங்கள் கட்சி மாநாடு நடைபெற்றது. அதை எங்களின் தந்தை தேவேகவுடா வீட்டில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அவரால் நேரில் வர முடியவில்லையே என்று நான், எனது சகோதரர் மற்றும் மேடையில் இருந்தவா்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினோம். இதை பா.ஜனதா மோசமான நிலையில் விமர்சித்துள்ளது.
இதை தான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜனதாவுக்கு கற்று கொடுத்ததா?. ஆபரேஷன் தாமரையை நம்பி கொண்டுள்ள மோசமான கட்சி பா.ஜனதா. கொலைகளை செய்வதே அவர்களின் தொழில். ஏழைகளின் ரத்தமே பா.ஜனதாவின் அதிகார அமிர்தம். நான் இன்னொருவரின் கண்ணீர் குறித்து குறைத்து பேச மாட்டேன். ஆனாலும் மோசமான மனநிலை கொண்ட பா.ஜனதாவுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
விதான சவுதாவில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தபோது தலைவர் கண்ணீர் சிந்தியபடி பேசினாரே அவர் யார்?, எந்த கட்சியை சேர்ந்தவர்?. வெள்ளத்தால் இறந்தவர்கள் பற்றி இந்த அரசுக்கு கவலை இல்லை. நடுரோட்டில் கொலை செய்யப்பட்டவர்களின் நிலை பற்றி கவலை இல்லை. ஆனால் சினிமாவில் நாய் இறந்ததை கண்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்ணீர் விட்டு அழுதார். அவர் எந்த கட்சியின் முதல்-மந்திரி?.
அழுவது என்பது எங்களின் சகஜமான குணம். ஆனால் உங்களை போல் இன்னொருவரை அழிக்கும் ராவண கலாசாரம் எங்களுடையது அல்ல. ஒருவரின் வாழ்க்கைக்கு தீ வைக்க மாட்டோம். வன்முறை, படுகொலையே உங்களின் எண்ணம். கொலை செய்துவிட்டு காசிக்கு காரிடார் அமைத்துவிட்டால் அந்த சிவன் உங்களை மெச்சுவாரா?.
பெங்களூருவில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் நீரில் மிதக்கின்றன. இது இந்த அரசின் கண்களுக்கு தெரியவில்லையா?. தந்தை-மகன்களின் உறவில் இருக்கும் உணர்ச்சி பூர்வமான விஷயத்தை விமர்சிக்கும் பா.ஜனதாவுக்கு வரும் நாட்களில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். நாடு முழுவதும் ஆபரேஷன் தாமரை என்ற துர்நாற்றம் வீசுகிறது. இது உங்களுக்கு அறுவறுப்பாக இல்லையா?.
இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.