இந்தியா

உத்தரகன்னடாவில் நிலச்சரிவு: 12 பேர் பலி, தேடும் பணி தீவிரம்

Published On 2024-07-26 05:31 GMT   |   Update On 2024-07-26 05:31 GMT
  • நிலச்சரிவில் 2 வீடுகள், ஒரு ஓட்டல் மண்ணுக்கு அடியில் சிக்கின.
  • தமிழகத்தை சேர்ந்த 8 பேர் நிலச்சரிவில் சிக்கினர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடந்த 16-ந்தேதி உத்தரகன்னடா மாவட்டம் அங்கோலா தாலுகா சிரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் 2 வீடுகள், ஒரு ஓட்டல் மண்ணுக்கு அடியில் சிக்கின. அப்போது அங்கு தேநீர் குடிப்பதற்காக சாலையோரம் நிறுத்தி இருந்த லாரி டிரைவர்களும் இதில் சிக்கிக் கொண்டனர்.

தமிழகத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள் 3 பேர் உள்பட 12 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கினார்கள். இவர்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முருகன், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சின்ணண்ன் உடல்கள் மீட்கப்பட்டன.

கேரளாவை சேர்ந்த லாரி டிரைவர் அர்ஜுன், ஓட்டலில் வேலை பார்த்த ஜெகநாத், கோகர்ணாவை சேர்ந்த லோகேஷ் ஆகியோரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாமக்கல்லை சேர்ந்த கியாஸ் டேங்கர் லாரி டிரைவரான சரவணன் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்றும், கடந்த 16-ந்தேதியில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது உறவினர்கள் அங்கோலா போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தற்போது நாமக்கல்லை சேர்ந்த சரவணன் (வயது 45) என்பவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

நிலச்சரிவில் டேங்கர் லாரி, மரக்கட்டைகள் லோடு ஏற்றி வந்த லாரி ஆகியவை அருகில் ஓடும் கங்காவளி ஆற்றுக்குள் தள்ளப்பட்டு அடித்து செல்லப்பட்டன. கியாஸ் டேங்கர் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு லாரியை தேடும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் கங்காவளி ஆற்றில் கேரளாவை சேர்ந்த அர்ஜுன் என்பவர் ஓட்டி சென்ற லாரி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

10 நாட்களுக்கு பிறகு அந்த லாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட 30 அடி தூரத்தில் கங்காவளி ஆற்றுக்குள் அந்த லாரி கிடக்கிறது. எனினும், டிரைவர் அர்ஜுன் லாரியில் சிக்கி உள்ளாரா? அல்லது ஆற்றில் அடித்து செல்லப்பட்டாரா? என்பது இதுவரை தெரியவில்லை. தற்போது ஆற்றில் இருந்து லாரியை தூக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இதனிடையே அர்ஜூனின் தாயார் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தனது மகனை மீட்டு தருமாறு வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

மேலும் கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் இது தொடர்பாக செல்போனில் தொடர்பு கொண்டு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவிடம் பேசியுள்ளார். கேரளாவில் இருந்து மீட்பு குழுவும் அங்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதுவரை 8 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 4 பேரின் கதி என்ன? என தெரியவில்லை. மாயமான 4 பேரின் உடல்களும் கங்காவளி ஆற்றில் கிடக்கலாம் என்பதால், தேடுதல் பணியில் அதிநவீன ஆளில்லாத விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அதாவது அந்த ஆளில்லாத விமானம், நீருக்கு அடியில் 20 கிலோ மீட்டர் அடியில் உள்ள பொருட்களையும் கண்டறியும் திறன் கொண்டதாகும். அதன்மூலம் டெல்லியை சேர்ந்த நிபுணர்கள் கங்காவளி ஆற்றில் 4 பேரையும் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

கடந்த 10 நாட்களாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 44 துணை ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உத்தரகன்னடா மாவட்ட கலெக்டராக தமிழகத்தை சேர்ந்த உமா என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் மீட்பு பணிகளை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளார். அடையாளம் காணப்பட்ட தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு விரைவில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News