திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம்: ஸ்ரீவாரி மெட்டுப்பாதையில் இரவில் பக்தர்களுக்கு தடை
- காவல் உதவி மையம் அருகே சிறுத்தை ஒன்று நடமாடியது.
- சிறுத்தை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டு மலை பாதை வழியாக நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பாதையில் உள்ள காவல் உதவி மையம் அருகே சிறுத்தை ஒன்று நடமாடியது.
இதனை கண்ட தேவஸ்தான பாதுகாப்பு படையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறுத்தை நடமாடிய காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.
ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை வழியாக திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் தற்காப்புக்காக கைத்தடிகளை வழங்கி அனுப்பி வைத்தனர்.
மேலும் இன்று முதல் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஸ்ரீவாரி மற்றும் பாதை மூடப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த பாதையில் பக்தர்கள் செல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்கள் உஷாராக இருக்க வேண்டும். பக்தர்கள் தனித்தனியாக நடந்து வர வேண்டாம். மேலும் வரும் வழியில் உணவுகளை நாய்களுக்கு வைக்க வேண்டாம்.
இதனால் நாய்கள் அங்கேயே தங்கி இருக்கும். இந்த நாய்களை வேட்டையாட சிறுத்தைகள் அடிக்கடி மலை பாதைக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.
திருப்பதி கோவிலில் நேற்று 84 ஆயிரத்து 66 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 29, 044 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ. 4.02 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.