கர்நாடகா சட்டசபை தேர்தல் லைவ் அப்டேட்ஸ்- பரபரப்பை எகிறச் செய்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்
- கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர்.
- பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 2615 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர். இந்த வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கின. இதில் ஜன் கி பாத், மேட்ரைஸ் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக உள்ளது.
பாஜக 94 முதல் 117 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என ஜன் கி பாத் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 91 முதல் 106 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 14 முதல் 24 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேபோல் மேட்ரைஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 114 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. காங்கிரஸ்-86, மதச்சார்பற்ற ஜனதா தளம்-21 இடங்கள் பெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் பாஜக 85 முதல் 100 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 94 முதல் 108 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 32 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
ஜீ மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ் முந்தியது. காங்கிரஸ் 108 தொகுதிகள், பாஜக 86 தொகுதிகள், மதச்சார்பற்ற ஜனதா தளம் 28 தொகுதிகளை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
பி மார்க் நடத்திய கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் முந்தியது. காங்கிரஸ் கட்சிக்கு 94 முதல் 108 இடங்கள் வரை கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது. பாஜகவுக்கு 85 முதல் 100 இடங்கள், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 24 முதல் 32 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை பார்க்கும்போது எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்றே தெரிகிறது. காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடையும் நேரமான மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறது.
மாலை 5 மணி நிலவரப்படி 65.59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதாலானா தாண்டவாவில் வாக்குச்சாவடி 10 மற்றும் 11ல் போலி வாக்குப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இரண்டு இளைஞர்களை பிடித்து காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ஹமீது முஷ்ரிப் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் இருவரும் வேறு மாவட்டத்தில் இருந்து வாக்களிக்க வந்ததாக கூறியிருக்கிறார்கள். இதையடுத்து அவர்கள் இருவரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மதியம் 3 மணி நிவலரப்படி 52.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
முற்போக்கான மற்றும் 40 சதவீத கமிஷன் இல்லாத மாநிலத்தை உருவாக்க கர்நாடக மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் திப்தூரில் வாக்களித்தார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற கட்சி தலைவருமான எச்.டி. குமாரசாமி, ராமநகராவில் உள்ள வாக்குச் சாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.