இந்தியா (National)

நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யக் கோரி மகாராஷ்டிரா அரசு கோரிக்கை

Published On 2024-06-08 09:30 GMT   |   Update On 2024-06-08 09:30 GMT
  • பீகாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்ததாக புகாா் எழுந்தது.
  • நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது.

நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு மீது பல்வேறு புகாா்கள் எழுந்தன.

பீகாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்ததாக புகாா் எழுந்தது. இந்த புகாா்களை அத்தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்.டி.ஏ.) மறுத்தது.

இந்த நிலையில், நீட் தோ்வு முடிவுகள் பாராளுமன்றத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பெற்றது பெரும் சர்ச்சையானது.

'நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதில் அளித்த என்.டி.ஏ., 'என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும் தோ்வு மையங்களில் சில தோ்வா்கள் நேரத்தை இழந்ததாலும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது' என்று விளக்கம் அளித்தது.

இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வு மகாராஷ்டிரா மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகவும் அம்மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பேசிய அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப், "நீட் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளது. நீட் தேர்வு, மாணவர்களை வஞ்சிப்பதாகவும், மகாராஷ்டிரா மாணவர்களை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

"நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை. அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை. சமூகநீதிக்கு எதிரானவை. தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை. நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம் கோப்போம். நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை" என்று அவர் கூறியிருந்தார்.

Tags:    

Similar News