இந்தியா (National)

பல்வேறு உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ஹிஸ்ப்-உத் தஹிரிர் அமைப்புக்கு தடை

Published On 2024-10-10 15:59 GMT   |   Update On 2024-10-10 15:59 GMT
  • பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை.
  • பயங்கரவாத அமைப்புகளில் சேர இளைஞர்களை ஊக்கப்படுத்தியது.

ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இதனை பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சமூக வலைதளங்கள் மூலமாக பயங்கரவாதத்தை பரப்பியது தெரியவந்ததால் ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்புக்கு மத்திய உள்துறை தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்படுகிறது. இந்த அமைப்பு பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது."

"பயங்கரவாத அமைப்புகளில் சேர இளைஞர்களை ஊக்கப்படுத்துவது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதில் இந்த அமைப்பு ஈடுபட்டது. இந்த அமைப்பு தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பயங்கரவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி நாட்டை பாதுகாப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல்வேறு உலக நாடுகள் ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை தடை செய்திருந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக தமிழகத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தை சேர்ந்த 10 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில் ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News