மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி, விமான சேவை கடும் பாதிப்பு
- மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி இருக்கிறது.
- பாதிப்பை பயனர்கள் தாங்களாகவே சரி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று அறிவிப்பு.
விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்கள் புளூ ஸ்கிரீன் (Blue Screen of Death) பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்த பாதிப்பு விண்டோஸ் இயங்குதளத்தின் கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.
மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி இருக்கிறது. பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்த பாதிப்பு ஏற்பட என்ன காரணம் என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
பாதிப்பை பயனர்கள் தாங்களாகவே சரி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், விண்டோஸ் முடங்கியதன் எதிரொலியால் ஐடி, மீடியா, ஏர்லைன்ஸ், வங்கிகள், மருத்துவமனை சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, நாடு முழுவதும் விமான நிறுவனங்களின் ஆன்லைன் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விமான நிலையங்களில், ஆன்லைன் சேவைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், விமான நிறுவனங்கள் மேனுவல் முறையை பின்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆன்லைனில் டிக்கெட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
அதனால், உடனடி பயணத் திட்டங்களைக் கொண்ட பயணிகளை செக்-இன் செய்ய முன்கூட்டியே விமான நிலையத்தை அடையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் வின்டோஸ் பயன்படுத்தும் பல ஆயிரம் கம்ப்யூட்டர்கள், லேப்டாப் செயல் இழந்துள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவைகள் நேற்று காலை முதல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், உலகின் பல நாடுகளில் ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறை பணிகள் முடங்கியுள்ளன.