மீனவர்களின் நலனுக்காக மொத்தம் ரூ.32,000 கோடி நிதி ஒதுக்கீடு- மத்திய மந்திரி தகவல்
- படகுகளை நிறுத்த வசதி போன்றவை செய்து தர மீனவர்கள் கோரிக்கை.
- மீனவர்களின் கோரிக்கைகளை 3 மாதத்திற்குள் நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு.
துர்காபூர்:
அந்தமான் நிக்கோபார் தீவு பகுதிகளுக்கு பயணம் மேற் கொண்ட மத்திய மீனவளத்துறை இணை மந்திரி எல்.முருகன், மத்திய அந்தமான் மாவட்டத்திற்கு உட்பட்ட துர்காபூர் கிராமத்தில் மீன்பிடி இறங்கு தளத்தை பார்வையிட்டார். அப்பகுதி மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது மீன்பிடித் தளத்தில் தங்களுக்கு சுத்தமானக் குடிநீர், தெருவிளக்கு, பொதுக் கழிப்பிட வளாகம், சாலை வசதி, படகுகளை நிறுத்துவதற்கான வசதி போன்றவை செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கேட்டுக் கொண்டனர்.
அண்டை நாட்டு மீனவர்கள் நம் கடல் எல்லைப் பகுதியில் வந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதைத் தடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இதைக் கேட்டறிந்த மந்திரி முருகன், மீனவர்களின் கோரிக்கைகளை 3 மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறியுள்ளதாவது: நாட்டிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பிரதமரின் மத்சய சம்படா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மீன்வளம், மீன்பிடித் தளம் மற்றும் மீன்பிடி இறங்கு தளம், துறைமுகம் மேம்பாடு, ஆழ்கடல் மீன்பிடித் தொழில் மேம்பாடு போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீலப் புரட்சி திட்டத்திற்கு 5,000 கோடி, துறைமுகங்களை மேம்படுத்தி நவீனப்படுத்த 7,000 கோடி, பிரதமரின் மத்சய சம்படா திட்டத்திற்கு 20,000 கோடி என மொத்தம் 32,000 கோடி நிதி, மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
பாரம்பரிய மீன்பிடித் தொழிலை மேம்படுத்தல் உள்பட பல்வேறு பணிகளுக்காக 2022-23 ஆம் நிதியாண்டில் அந்தமானுக்கு ரூ.7.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்