மணிப்பூர் மக்களின் வலி, வேதனை குறித்து மோடி அரசு அலட்சியமாக இருக்கிறது- மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
- சமூகங்களுக்கு இடையேயான பிளவு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது.
- ரெயில் திறப்பு விழாக்கள் மற்றும் பா.ஜனதா கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான நேரம் பிரதமருக்கு இருக்கிறது.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
எங்களது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், மணிப்பூர் மாநிலத்துக்கு சென்ற போது அங்குள்ள மக்களிடம் இருந்து வலியின் இதயத்தை பிளக்கும் வேதனையான கதைகளை கேட்டனர்.
10 ஆயிரம் அப்பாவி குழந்தைகள் உள்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம் களில் உள்ளனர். பெண்கள் போதிய வசதி இல்லாமல் மருந்துகள், உணவு பற்றாக் குறையை எதிர்கொண்டு உள்ளனர். பொருளாதார நடவடிகைகள் முடங்கியுள்ளன. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. விவசாயத்தை விவசாயிகள் நிறுத்திவிட்டனர். மக்களுக்கு அதிகமான நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளன. உளவியல் ரீதியான கஷ்டங்களில் அவர்கள் போராடுகின்றனர். சமூகங்களுக்கு இடையேயான பிளவு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் கூட்டங்கள், ரெயில் திறப்பு விழாக்கள் மற்றும் பா.ஜனதா கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான நேரம் பிரதமருக்கு இருக்கிறது. ஆனால் மணிப்பூர் மக்களின் வேதனைகள், துன்பங்களை பற்றி பேசவோ அல்லது சமூகங்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்ப்பதில் பணியாற்றவோ பிரதமர் மோடிக்கு நேரமில்லை.
மணிப்பூர் மக்களின் வலி, வேதனைகள் குறித்து மோடி அரசு அலட்சியமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் தனது பதிவில் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.