எல்லாரும் ஏலியன் மாதிரி பாத்தாங்க.. ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் ரிக்ஷா ஓட்டுனர்
- வர்த்தகத்திற்காக பயன்படுத்தி வந்த காரை விற்க நேரிட்டது.
- நாள் ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
ஜம்மு காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கின் முதல் பெண் இ-ரிக்ஷா ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றார் 39 வயதான மீனாட்சி தேவி. கடந்த ஆண்டு இவரின் கணவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு சிகிச்சை செலவுக்காக மீனாட்சி தேவியின் குடும்ப சூழல் தலைகீழாக மாறிப் போனது. இதன் காரணமாக மீனாட்சி தேவியின் குடும்பம் வர்த்தகத்திற்காக பயன்படுத்தி வந்த காரை விற்க நேரிட்டது.
குடும்ப சூழலில் மனம் தளராத மீனாட்சி, நிதி நிலையை எதிர்கொள்ள தானே களத்தில் இறங்க முடிவு செய்தார். அதன்படி இ-ரிக்ஷா ஓட்டி வருமானம் ஈட்டலாம் என அதற்கான பணிகளை துவங்கினார். இவரது முடிவுக்கு அவரது உறவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதே போன்று நண்பர்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா கூட்டமைப்பினரும் இவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனினும், எதிர்ப்புகளை கடந்து செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் இ-ரிக்ஷா ஓட்டும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். முதற்கட்டமாக இவரது தொழில் சற்று சுமாராகவே இருந்துள்ளது. ஆனால், தற்போது தினமும் நாள் ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
"முதலில் எல்லாரும் என்ன வேற்றுகிரகவாசி போன்றே பார்த்தனர். ஆனால், எதிர்ப்புகளை கண்டு கவலை கொள்ளாமல், எனது நிலைமையை எப்படி மாற்ற வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். இதன் மூலம் எனக்கு நம்பிக்கை அதிகரித்தது. தற்போது நாள் ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை சம்பளம் ஈட்டுகிறேன். எனது வாடிக்கையாளர்களுக்கு தொடர் சேவை வழங்குவதால் என்னை யாரும் ஆட்டோ ஸ்டாண்ட்-இல் பார்க்க முடியாது," என்று மீனாட்சி தேவி தெரிவித்தார்.