இந்தியா

முஸ்லிம் ஓட்டுநர்.. மனநலமற்ற இளைஞர்.. தொடர் வன்முறையில் கன்வர் பக்தர்கள் - அடுத்தடுத்த வீடியோக்கள்

Published On 2024-07-26 09:11 GMT   |   Update On 2024-07-26 09:14 GMT
  • கன்வர் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் சிலர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  • மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கன்வார் யாத்ரீகர்கள் கட்டைகளால் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார்,கவுமுக், கங்கோத்திரி உள்ளிட்ட புனிதத்தலங்களுக்கு சிவனின் பக்தர்கள் பயணம் சென்று கங்கை நீரை எடுத்துவரும் இந்து மத யாத்திரை கன்வர் யாத்திரை என்று அழகைக்கப்படுகிறது. உத்தரபிரதேசம் வழியாக கடந்த ஜூலை 22 ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையானது ஆகஸ்ட் 6 தேதி முடிவடைகிறது.

முன்னதாக உ.பியில் கன்வர் யாத்திரை நடக்கும் வழியில் உள்ள உணவகங்களின் முன் உரிமையாளர்கள் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டது. இது இஸ்லாமிய கடை உரிமையாளர்களை பாதிக்கும் விதமாக உள்ளது என்று சர்ச்சை எழுந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்கிடையில் கடைகளில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது, அமைதியை உறுதிசெய்யவே என்று உச்சநீதிமன்றத்தில் உ.பி அரசு வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கன்வர் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் சிலர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 21 ஆம் தேதி உ.பி மாநிலம் முஜாபர்நகரில் உள்ள சாலையில் தங்களை பார்த்து ஹாரன் அடித்ததாகவும் மோத முயன்றதாகவும் கூறி இஸ்லாமிய நபர் சென்ற காரை அடித்து உடைத்து அவரை தாக்கும்  வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 15 கன்வர் யாத்ரீகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடந்த மற்றொரு சம்பவத்தின் பதறவைக்கும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கன்வார் யாத்ரீகர்கள் கட்டைகளால் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

உ.பியின் மீனாக்ஷி சவுக் பகுதியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி முகாமிட்டிருந்த அந்த பக்தர்கள், அவ்வழியாக சென்ற மன நலம் பாதிக்கப்பட்ட நபரை மக்கள் முன்னிலையில் அடித்து துன்புறுத்தி அதை படம் பிடித்தும் உள்ளனர். தாக்கப்பட்ட நபர் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் உ.பி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடந்துவருவது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏறபடுத்தியுள்ளது.

Tags:    

Similar News