இந்தியா

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகிறது

Published On 2024-01-12 09:17 GMT   |   Update On 2024-01-12 09:17 GMT
  • 2024-2025-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • வருடாந்திர நிதியுதவியை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் அல்லது ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

புதுடெல்லி:

வருகிற 31-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2024-2025-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தொடரில் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார்.

வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பட்ஜெட்டில் புதிய வரிகள் அதிகம் விதிக்கப்பட வாய்ப்பில்லை எனவும், தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக பெண்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் விவசாயிகளுக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இடம் பெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு தற்போது ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் நிலம் வைத்திருக்கும் 11 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

அவர்களுக்கு வருடாந்திர நிதியுதவியை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் அல்லது ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டால் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 4 தவணைகளாகவும், தலா ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்பட்டால் ரூ.3 ஆயிரம் 3 தவணைகளாக செலுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதவிர விவாசயிகள் தங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், அதிக உரம் மற்றும் இடுபொருள் விலைகளின் பாதிப்பில் இருந்து அவர்களை காப்பாற்றுவதாகவும், மானியத்தை உயர்த்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 15 தவணைகளில் 2.8 லட்சம் ரூபாய்க்கு மேல் அரசு வழங்கியுள்ளது.

இந்த சூழலில் நிதியுதவியை உயர்த்துவதோடு அதனை பெறுவதற்கான தகுதியை தளர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசுக்கும் ரூ.20 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News