ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு: குற்றவாளிகள் தண்டனை விபரம் 15-ந்தேதி அறிவிப்பு
- பயங்கரவாத அமைப்பில் சேர்த்தது யார்? என்பதை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொண்டது.
- தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்க சில அமைப்புகள் ரகசியமாக செயல்படுவதாக உளவுத்துறை எச்சரித்தது.
இதுதொடர்பாக நடந்த விசாரணையில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் இருந்து பலர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களை பயங்கரவாத அமைப்பில் சேர்த்தது யார்? என்பதை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொண்டது. இதில் கேரளாவில் இருந்து துருக்கி சென்ற மிதிலாஜ், அப்துல் ரசாக், ஹம்சா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
துருக்கியில் கைதான 3 பேரும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி அனில் கே பாஸ்கர் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
இதில் குற்றம்சாட்டப்பட்ட மிதிலாஜ், அப்துல் ரசாக் மற்றும் ஹம்சா ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்தார்.
இவர்கள் மீதான தண்டனை விபரத்தை வருகிற 15-ந் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.