தமிழ்நாட்டுடன் சண்டை போட விருப்பம் இல்லை: டி.கே.சிவக்குமார்
- அரிசி கொடுக்கும் வரை பணம் கொடுக்கப்படும்.
- பேச்சு வார்த்தை மூலமாக 2 மாநிலங்களுக்கும் இருக்கும் பிரச்சினை தீர்க்கப்படும்.
பெங்களூரு :
கர்நாடகத்தில் பருவமழை சரியாக பெய்யாததாலும், கே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் இருப்பு இல்லாததாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை என்று நேற்று முன்தினம் டெல்லியில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்ளும் விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டுடன் சண்டை போட நமக்கு விருப்பம் இல்லை. காவிரி நதிநீர் பங்கீட்டு கொள்ளும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் கர்நாடகத்தின் நிலைமை என்ன என்பது தெரியவில்லை. இங்குள்ள அணைகளில் தண்ணீர் இல்லை. குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்காரர்கள் நமது சகோதரர்கள். அவர்களுடன் நாம் யுத்தம் (போர்) செய்ய முடியாது.
ஓசூரில் இருந்து தினமும் லட்சக்கணக்கானோர் பெங்களூருவுக்கு வேலைக்காக வருகிறார்கள். கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டுக்கு செல்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் காவிரி நதிநீர் பங்கீட்டு கொள்ளும் விவகாரம் குறித்து தமிழ்நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். பேச்சு வார்த்தை மூலமாக 2 மாநிலங்களுக்கும் இருக்கும் பிரச்சினை தீர்க்கப்படும்.
சட்டசபை தேர்தலின் போது நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி அன்னபாக்ய திட்டத்தை அமல்படுத்தி உள்ளோம். 5 கிலோ அரிசி கொடுப்பது தொடங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 5 கிலோ அரிசிக்கு பணம் வழங்குவதாக அறிவித்துள்ளோம். அதன்படி, பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குக்கு பணத்தை டெபாசிட் செய்வோம். அரிசி கொடுக்கும் வரை பணம் கொடுக்கப்படும். ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து அரசியல் செய்து வருகிறது. பா.ஜனதாவினர் தான்முதலில் அரிசி கொடுக்க முடியாவிட்டால், அதற்கு உரிய பணத்தை கொடுக்கும்படி கூறினார்கள். அதன்படி, அரிசிக்கு பதில் பணம் கொடுக்க அரசு முடிவு செய்திருக்கிறது. தற்போது 10 கிலோ அரிசி கொடுக்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறுகின்றனர்.
இதன்மூலம் பா.ஜனதாவினரின் இரட்டை வேடம் வெளியே வந்துள்ளது. சட்டசபை கூடுவதால் அரசுக்கு எதிராக சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவதாக பா.ஜனதாவினர் அறிவித்துள்ளனர்.பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தட்டும், சந்தோஷம். அவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம். அதே நேரத்தில் பா.ஜனதாவினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது பற்றியும் போராட்டம் நடத்தட்டும்.
கர்நாடகத்திற்கு தேவையான அரிசியை பெற மற்ற மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நமக்கு தேவையான அரிசி நிரந்தரமாக கிடைக்க வேண்டும். ஒரு மாதம் மட்டும் கிடைக்கும் அரிசியை வைத்து, திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியாது. இருப்பினும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.