இந்தியா

கர்நாடக ஹிஜாப் கட்டுப்பாடுகள் பள்ளிகளுக்கு மட்டும்தான்- உச்ச நீதிமன்றம் கருத்து

Published On 2022-09-07 15:12 GMT   |   Update On 2022-09-07 15:12 GMT
  • நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது
  • 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றவேண்டும் என வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

புதுடெல்லி:

கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உடுப்பியில் உள்ள அரசு பியுசி கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்களில் ஒருவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அரசியலமைப்பின் 19, 21 அல்லது 25 வது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட உரிமைகளைப் பயன்படுத்தி, ஒரு பெண் ஹிஜாப் அணிய முடிவு செய்தால், அவளுடைய உரிமைகளை மீறும் வகையில் அரசு தடை விதிக்க முடியுமா? என்று அவர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இப்போது கேள்வி என்னவென்றால், ஹிஜாப் அணிவதை யாரும் தடை செய்யவில்லை. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் அதை அணியலாம், பள்ளியில் மட்டுமே கட்டுப்பாடு உள்ளது. அதுபற்றி மட்டுமே நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம், என்றனர்.

இந்த வழக்கில் நாளையும் வாதம் தொடர்ந்து நடைபெறும்.

Tags:    

Similar News