சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து எங்களிடம் ஆலோசனை நடத்தவில்லை: திரிணாமுல் காங்கிரஸ்
- காங்கிரஸ் கட்சி எம்.பி. கே சுரேஷ் சபாநாயகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
- இது தொடர்பாக எங்களிடம் ஆலோசிக்கவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
துணை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்துள்ள காரணத்தினால் காங்கிரஸ் கட்சி கே. சுரேஷை சபாநாயகர் போட்டிக்கு நிறுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா நிறுத்தப்பட்டுள்ளார். ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்ய என்டிஏ விரும்புகிறது. துணை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுத்தால்தான் ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்ய சம்மதிப்போம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை போட்டி ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சி அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் ஆதரவு கேட்க வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 30 இடங்களுக்கு மேல் உள்ளது. இதனால் அந்த கட்சியின் ஆதரவும் முக்கியது.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து எங்களிடம் எந்தவிதமான ஆலோசனையும் நடத்தப்படவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அபிஷேக் பானர்ஜி கூறுகையில் "இது தொடர்பாக எங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. துரதிருஷ்டவசமாக ஒருதலைபட்சமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்களுடைய கட்சி தலைவர் மம்தா பானர்ஜி சபாநாயகர் தேர்தல் தொடர்பாக முடிவு செய்வார்" என்றார்.
மக்களவையில் எம்.பி.க்கள் பதவி ஏற்றுக் கொண்டிருந்தபோது அபிஷேக் பார்னஜி உடன் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.