ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மேல்முறையீடு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
- காலி ஆம்னி பஸ்களை மாநகரத்துக்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்கும் அதே வேளையில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கவில்லை.
- இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது.
புதுடெல்லி:
தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 'தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அரசு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்து, அப்போது ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் பாலாஜி சீனிவாசன், 'போக்குவரத்து சட்ட விதிகளுக்கு எதிராக இத்திட்டம் அமைந்துள்ளது. காலி ஆம்னி பஸ்களை மாநகரத்துக்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்கும் அதே வேளையில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கவில்லை. பயணிகளுக்கு பல்வேறு சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன' என வாதிட்டார்.
இதற்கு நீதிபதிகள் 'பயணிகள் யாரும் தங்கள் சங்கடங்கள் குறித்து வழக்கு தாக்கல் செய்யவில்லையே, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகதான் தோன்றுகிறது' என தெரிவித்தனர்.
மேலும் இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.