இந்தியா

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அசாம் எதிர்க்கட்சிகள் மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிப்பு

Published On 2024-03-12 12:11 GMT   |   Update On 2024-03-12 12:11 GMT
  • அசாமில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மாநிலத்தில் கூடுதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
  • அனைத்து காவல் நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கவுகாத்தி உட்பட கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன

குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியதற்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அசாம் மாநில எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சிகளுக்கு அம்மாநில காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அந்த நோட்டீசில், எதிர்க்கட்சிகள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால், பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டாலோ, பொதுமக்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டாலோ, எதிர்க்கட்சிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அசாம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளாக உள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட பல கட்சி தலைவர்களுக்கு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அத்தகைய போராட்டங்கள் "சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அசாமில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மாநிலத்தில் கூடுதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோனித்பூர் மாவட்டத்தில் ஒரு இடத்தில் அதிக மக்கள் கூடுவதைத் தடை செய்யும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து காவல் நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கவுகாத்தி உட்பட கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், பதற்றமான பகுதிகளில் காவல்துறையினரின் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, குடியுரிமை திருத்தச்சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று கருதி, காவலர்களின் நீண்ட கால விடுப்புகளை அம்மாநில அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அசாம் மாநிலத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் இறந்தனர். பின்பு கொரோனா ஊரடங்கை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News