இந்தியா

உதவி செய்வது நமது கடமை... துருக்கியில் இருந்து திரும்பிய மீட்பு குழுவினரிடையே பிரதமர் மோடி பேச்சு

Published On 2023-02-20 15:59 GMT   |   Update On 2023-02-20 15:59 GMT
  • நீங்கள் மனிதகுலத்திற்கு சிறந்த சேவை செய்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.
  • உலகில் எங்கு நெருக்கடிகள் ஏற்பட்டாலும், முதலில் செல்ல இந்தியா தயாராக உள்ளது.

புதுடெல்லி:

துருக்கி-சிரியாவில் கடந்த 6-ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உலகின் பல்வேறு நாடுகள் மீட்பு மற்றும் உதவிகளை வழங்கின. பல்வேறு நாடுகள் தங்கள் மீட்புக்குழுக்களை அனுப்பி வைத்தன.

அந்த வகையில் 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் இந்தியாவும் மீட்புக்குழுக்களை அனுப்பி வைத்தது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 3 பிரிவின் 151 வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும், தேசியபேரிட மீட்புக்குழுவின் மோப்ப நாய்களும் மீட்பு பணியில் ஈடுபட்டன.

இந்நிலையில், மீட்புப்பணிகளை முடித்துக்கொண்டு துருக்கியில் இருந்து இந்திய மீட்புக்குழுவினர் இன்று நாடு திரும்பினர். அவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். ஆபரேஷன் தோஸ்த் திட்டத்தில் துருக்கியில் மீட்பு பணியில் ஈடுபட்ட குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறுகையில், நீங்கள் மனிதகுலத்திற்கு சிறந்த சேவை செய்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். ஒட்டுமொத்த உலகத்தையும் நாம் ஒரே குடும்பமாக பார்க்கிறோம். குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் பிரச்சினையில் இருக்கும்போது அவருக்கு விரைவாக சென்று உதவி செய்வது இந்தியாவின் கடமை' என்றார்.

இந்தியா தன்னிறைவு கொண்ட நாடாக தனது அடையாளத்தை வலுப்படுத்தியுள்ளது. தன்னலமற்ற சேவை நோக்கோடு பிற நாடுகளுக்கு உதவுகிறது. உலகில் எங்கு நெருக்கடிகள் ஏற்பட்டாலும், முதலில் செல்ல இந்தியா தயாராக உள்ளது. உலகின் சிறந்த நிவாரணம் மற்றும் மீட்புக் குழு என்ற நமது அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் மோடி கூறினார்.

Tags:    

Similar News