மத்திய அரசு மீது டுவிட்டர் முன்னாள் சிஇஓ பரபரப்பு குற்றச்சாட்டு: அப்பட்டமான பொய் என்கிறார் மத்திய மந்திரி
- விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான டுவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்
- நிறுவன ஊழியர்கள் வீட்டில் சோதனை நடத்தப்படும் என மிரட்டினர்
டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜேக் டார்சி. விவசாயிகள் போராட்டம் இந்தியாவில் நடைபெற்றபோது இந்திய அரசு கொடுத்த நெருக்கடி குறித்து குறிப்பிட்டிருந்தார்.
அதில் ''டுவிட்டர் நிறுவனத்துக்கு இந்திய அதிகாரிகளிடம் இருந்து எராளமான கோரிக்கைகள் வந்தன. விவசாயிகள் போராட்டத்தை வெளிப்படுத்தும் டுவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும். அதேபோல் மத்திய அரசை விமர்சனம் செய்யும் கணக்குகளையும் முடக்க வேண்டும் என்றனர்.
எங்களது கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், இந்தியாவில் டுவிட்டர் நிறுவன அலுவலகம் மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நாங்கள் நிறுவன ஊழியர்களின் வீட்டில் சோதனை நடத்துவோம் எனத் தெரிவித்தார்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இது சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், ஜேக் டார்சியின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்தரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில் ''டுவிட்டர் நிறுவனத்தைச் சேர்ந்த எவரும் சோதனைக்கு ஆளாகவில்லை. சிறைக்கு போகவில்லை. இந்தியாவில் டுவிட்டர் அலுவலகம் மூடப்படவும் இல்லை. டுவிட்டருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு அது செயல்பட்டிருந்தால், டுவிட்டர் அரசு வழிகாட்டுதல்களை மீறியிருக்கும். டுவிட்டருக்கு இந்திய சட்டத்தின்படி இந்திய இறையாண்மையை ஏற்படதில் சில சிக்கல் இருந்தது. அதற்கு அதன் சட்டம் பொருந்தாதது போன்று செயல்பட்டது.
இறையாண்மை கொண்ட நாடாக இந்தியாவுக்கு, தனது சட்டங்களை இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் பின்பற்றுவதை உறுதி செய்யும் உரிமை உண்டு.
ஜேக் டார்சியின் பாகுபாடான நடத்தை, இந்திய அரசுக்கு எதிரான இணை-நிறுவனர் கருத்து போன்ற கடந்த கால வரலாற்று சந்தேகத்திற்குரிய காலக்கட்டத்தை அகற்றுவதற்கான முயற்சி'' எனத் தெரிவித்துள்ளார்.