பாராளுமன்றத்தில் புகை குண்டு வீச்சு: முக்கிய ஆதாரங்களை எரித்து அழித்த லலித் ஜா
- பலத்த 4 அடுக்கு பாதுகாப்பை மீறி அவர்கள் பாராளுமன்றத்துக்குள் புகை தாக்குதல் நடத்தியது மிகப்பெரும் பாதுகாப்பு குறைபாடாக கருதப்படுகிறது.
- பாராளுமன்ற புகை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிக்கொடுத்தது லலித் மோகன் ஜா என்பவர்தான் என்பது விசாரணையில் தெரியவந்தது.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் சாகர் சர்மா, மனோ ரஞ்சன் என்ற 2 இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்து மஞ்சள் நிற புகைக்குண்டு வீச்சு நடத்தினார்கள். பலத்த 4 அடுக்கு பாதுகாப்பை மீறி அவர்கள் பாராளுமன்றத்துக்குள் வண்ண புகை குண்டு தாக்குதல் நடத்தியது மிகப்பெரும் பாதுகாப்பு குறைபாடாக கருதப்படுகிறது.
பாராளுமன்றத்துக்குள் புகை தாக்குதல் நடந்த அதே நேரத்தில் நீலம் தேவி என்ற பெண்ணும், அமோல் ஷிண்டே என்ற வாலிபரும் பாராளுமன்ற வளாகத்தில் புகைக்குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை போலீசார் மேலும் விசாரணைக்காக 7 நாள் காவலில் எடுத்து உள்ளனர்.
இதற்கிடையே பாராளுமன்ற புகை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிக்கொடுத்தது லலித் மோகன் ஜா என்பவர்தான் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இவர் அங்கு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்தான் முக்கிய குற்றவாளி ஆவார். பாராளுமன்றத்தில் புகை குண்டு தாக்குதல் நடத்துவதற்கு திட்டங்களை வடிவமைத்து கொடுத்தது இவர்தான்.
குற்றவாளிகள் தாக்குதலுக்கு பயன்படுத்திய பிரத்தியேக ஷூவை இவர்தான் லக்னோ சென்று தயாரித்து வாங்கி வந்துள்ளார். மேலும் குற்றவாளிகள் குருக்கிராமில் தங்கி இருக்கவும், புகை குண்டு குப்பிகள் வாங்கவும் இவர்தான் ஏற்பாடு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக பாராளுமன்ற புகை குண்டு தாக்குதலில் லலித் மோகன் ஜா முக்கிய குற்றவாளி என்பது உறுதியானது. தாக்குதல் நடந்தபோது அவரும் பாராளுமன்ற வளாகத்தில்தான் இருந்தார். நீலம் தேவியும், அமோல் ஷிண்டேவும் பாராளுமன்ற வளாகத்தில் புகை குண்டுகளை வீசிய போது அதை செல்போனில் லலித் மோகன் ஜா படம் பிடித்தார்.
பாதுகாவலர்களிடம் இருந்து மிகவும் லாவகமாக அவர் தப்பி சென்று விட்டார். அவரை பிடிக்க டெல்லி முழுக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அவரது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. கைதான குற்றவாளிகள் 4 பேரின் செல்போன்கள் லலித் மோகன் ஜாவிடம் இருப்பது தெரிய வந்தது.
எனவே அவரை கைது செய்தால்தான் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் என்று கருதப்பட்டது. இந்தநிலையில் நேற்று இரவு லலித் மோகன்ஜா டெல்லி போலீசாரிடம் சரண் அடைந்தார். டெல்லியில் உள்ள பாத் ஆப் டியூட்டி என்ற போலீஸ் நிலையத்தில் அவர் சரணடைந்தது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீசார் அவரை பாராளுமன்ற தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து லலித் மோகன் ஜாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டதும் லலித் மோகன் ஜா பஸ்சில் ராஜஸ்தானுக்கு தப்பி சென்றிருக்கிறார்.
அங்கு அவர் நகுர் என்ற பகுதியில் தனது 2 நண்பர்களுடன் ஓட்டலில் தங்கி இருக்கிறார். அவர் செல்லுமிடங்களில் எல்லாம் போலீசார் தன்னை நெருங்குவதை உணர்ந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்துதான் அவர் டெல்லிக்கு திரும்பி வந்து சரணடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து முக்கிய குற்றவாளி லலித் மோகன் ஜாவுக்கு உதவி செய்த 2 நண்பர்கள் பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அந்த 2 பேரும் மகேஷ், ராகேஷ் என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முக்கிய குற்றவாளி லலித் மோகன் ஜாவும் பாராளுமன்றத்துக்குள் புகைக்குண்டு வீசி தாக்கும் திட்டத்துடன் வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்காததால் அவர் உள்ளே செல்லவில்லை என்று தெரிய வந்துள்ளது.
கொல்கத்தாவில் அவருக்கு நெருக்கமானவர்கள் யார்? யார்? என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஒருவருடன் அவர் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
லலித் மோகன் ஜாவை இயக்கியது யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக உள்ளனர். அவருக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஆவணங்களை சேகரிக்கும் முயற்சிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் முக்கிய குற்றவாளி லலித் மோகன் ஜா சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் மீது மிகுந்த பற்று கொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது. பகத்சிங் போன்று நாட்டுக்காக புரட்சி செய்ய வேண்டும் என்று அவர் முகநூலில் பதிவுகளை வெளியிட்டு ஆதரவு பெற்ற தாகவும் தெரியவந்துள்ளது.
லலித் மோகன் ஜா என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்றில் பொதுச்செயலாளராக இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த அமைப்பின் தலைவருக்கு அவர் பாராளுமன்ற தாக்குதல் முடிந்ததும் தகவல்கள் அனுப்பி இருக்கிறார். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அந்த தகவலில் அவர் கூறி இருக்கிறார்.
இதனால் பாராளுமன்ற தாக்குதல் சதி திட்டத்தில் கொல்கத்தாவை சேர்ந்த மேலும் சிலர் தொடர்பில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் லலித் மோகன் ஜா ராஜஸ்தானுக்கு தப்பி சென்றபோது தன்னுடன் செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து சென்றுள்ளார்.
அந்த ஆவணங்களை அவர் தீவைத்து எரித்து இருப்பதாக விசாரணைக் குழுவினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட சாகர் சர்மா, மனோ ரஞ்சன், நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகிய 4 பேரின் செல்போன்களை அவர் தீ வைத்து முழுமையாக எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து குற்றவாளிகளிடம் வேறு கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.