கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு மசோதா விவகாரம்: "PhonePe" புறக்கணிப்பு பிரசாரத்தால் மன்னிப்பு கேட்ட சிஇஓ
- தனக்கு உள்பட மக்களுக்கு இந்த மசோதா நியாயமானது கிடையாது.
- 25 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய சொந்த நகரத்தில் வசித்து வரும் எனது குழந்தைகளுக்கு...,
கர்நாடக மாநில மந்திரிசபையில் தனியார் நிறுவனங்களில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 100 சதவீத வேலை வாய்ப்பை உறுதி செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.
இதற்கு பெரும்பாலான தனியார் நிறுவன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் மசோதா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா தெரிவித்தார். நிர்வாகம் தொடர்பான வேலையில் 50 சதவீதம், நிர்வாகம் அல்லாத வேலையில் 75 சதவீதம் ஒதுக்கீடு என மசோதாவில் திருத்தம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் பணபரிமாற்றம் செயலியான போன்பே (PhonePe) சிஇஓ சமீர் நிகம் "தனக்கு உள்பட மக்களுக்கு இந்த மசோதா நியாயமானது கிடையாது. என்னுடைய தந்தை அவரது பணிக்காலத்தில் பல்வேறு மாநிலங்களில் இந்திய கடற்படையில் பணிபுரிந்துள்ளார். என்னுடைய கேள்வி, 25 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய சொந்த நகரத்தில் வசித்து வரும் எனது குழந்தைகளுக்கு வேலை மறுக்கப்படுமா? என்பதுதான் எனக் கூறியிருந்தார்.
இதற்கு கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். PhonePe-ஐ புறக்கணிக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போன்பே சிஇஓ சமீர் நிகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.
நான் யாருடைய உணர்வையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதுபோன்று கூறவில்லை. யாரையும் காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் முதலாவதாக, முதன்மையாக விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.
என்னுடைய நோக்கம் ஒருபோதும் கர்நாடகா மற்றும் அங்குள்ள மக்களை இழிவுப்படுத்துவது இல்லை. என்னுடைய கருத்து யாருடைய உணர்வை காயப்படுத்தியிருந்தால், உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
போன்பே (PhonePe) நிறுவனம் பெங்களூருவில்தான் தொடங்கப்பட்டது. தொழில்நுட்பத் திறமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற இந்த நகரத்தில் உள்ள நம்முடைய அடித்தளம் பற்றி நம்பமுடியாத அளவிற்கு பெருமிதம் கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.