இந்தியா

மக்களுக்காக ஓய்வின்றி உழைக்க மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

Published On 2024-08-30 05:33 GMT   |   Update On 2024-08-30 05:39 GMT
  • மக்களிடம் எதிர்மறையான மற்றும் தவறான கதைகள் பரப்பப்படுகிறது.
  • முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் தனது அமைச்சரவையில் முதல் முறையாக சேர்க்கப்பட்ட மந்திரிகளை சந்தித்து பேசினார்.

டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடந்த இந்த சந்திப்பு 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அப்போது மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

மோடி பேசுகையில், `அனைத்து நிலைகளிலும் முடிவெடுப்பதை விரைவுப்படுத்த வேண்டும். அரசுக்கு எதிராக கூறப்படும் தவறான தகவல்களை முறியடிக்கும் வகையில், அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் குறித்து அனைத்து மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

சாமானியர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு அரசாங்கம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

ஆனால் மக்களிடம் எதிர்மறையான மற்றும் தவறான கதைகள் பரப்பப்படுகிறது. இதை முறியடிக்க பொது மக்களுக்கு சரியான தகவல்களை அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மக்களுக்காக ஓய்வின்றி உழைக்க மந்திரிகள் தங்களை விரைவில் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். செயல், சீர்திருத்தம், மாற்றம், தகவல் என்ற 4 புதிய மந்திரங்களை மக்கள் சேவையின் போது அமைச்சரவை சகாக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.

அரசின் செயல்பாடுகள், சாதனைகள், பிரசாரம் மற்றும் முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மத்திய அரசு பொறுப்புடன் செயல்படுகிறது என்ற செய்தியை சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

சமூக ஊடகங்களின் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் 3-வது முறையாக பதவியேற்று 100 நாட்களை நிறைவு செய்யும் போது அந்தந்த அமைச்சகங்களின் 10 முக்கிய முடிவுகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று மந்திரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

அரசின் திட்டங்களை தடையின்றி செயல்படுத்த அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

நாட்டில் சுகாதாரம், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான விளக்க காட்சிகள் இந்த கூட்டத்தில் இடம்பெற்றன.

ஒவ்வொரு துறையிலும், அமைச்சகத்திலும் மனித வளத்தை மறுசீரமைப்பதற்கான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும், அனைத்து ஊழியர்களின் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துமாறும் உயர் அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.

Tags:    

Similar News