இந்தியா

மல்யுத்த வீரருடன் குப்பைக்கு 'குட் பை ' சொன்ன பிரதமர் மோடி

Published On 2023-10-01 10:44 GMT   |   Update On 2023-10-01 10:44 GMT
  • 2014 அக்டோபர் 2 அன்று 'ஸ்வச் பாரத் மிஷன்' திட்டம் தொடங்கப்பட்டது
  • 'ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம்' என அழைப்பு விடுத்தார்

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி எனும் பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 2014-ல் அக்டோபர் 2 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி 'ஸ்வச் பாரத் மிஷன்' (SBM) எனும் 'தூய்மை இந்தியா' திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள கிராமங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவை முழுவதிலும் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாளை காந்தி ஜெயந்தியையொட்டி 9-வது ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்க, "ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம்" (ஏக் தரீக், ஏக் கண்டா, ஏக் சாத்) என நாட்டு மக்கள் அனைவருக்கும் மோடி அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய செயலாளர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நாடு முழுவதும் இதில் பங்கேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக மல்யுத்த வீரர் அங்கித் பையன்புரியாவுடன் இணைந்து பிரதமர், தூய்மை பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

தூய்மையே சேவை இயக்கத்தில் நாடு கவனம் செலுத்தி கொண்டிருக்கிறது. இன்று நான் அங்கித்துடன் தூய்மை பணியில் ஈடுபட்டேன். தூய்மையை தாண்டி உடற்தகுதி மற்றும் நல்வாழ்வு குறித்த கருத்துக்களை பரிமாறி கொண்டோம்.

இவ்வாறு அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த அங்கித் ஒரு உடற்பயிற்சி ஆர்வலர். இவர் வெளிநாட்டு உபகரணங்களின் உதவி இல்லாமல் இந்திய வழிமுறைகளிலேயே உடற்கட்டையும், உடல் நலத்தையும் பெற முடியும் என வலியுறுத்தி வருபவர். 75 நாட்கள் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சியின் மூலம் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் வளர்த்து கொள்ள முடியும் என்பது இவரது சித்தாந்தம்.

Tags:    

Similar News