மீட்புப் பணிகளில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் பாராட்டுக்கள் - பிரதமர் மோடி டுவிட்
- ஒடிசா ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது.
- ரெயில் விபத்து காரணமாக இதுவரை 90 ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது
புதுடெல்லி
ஒடிசாவில் நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, ஒடிசா ரெயில் விபத்து காரணமாக இதுவரை 90 ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 46 ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதுடன்,11 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் போராடிய மீட்புக்குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், துன்பத்திலும் மக்களின் தைரியம் ஊக்கமளிக்கிறது. துன்பங்களை எதிர்கொண்டாலும் நமது தேசத்தின் மக்கள் காட்டிய தைரியமும் கருணையும் ஊக்கமளிக்கிறது. விபத்து நடந்தவுடன் ஏராளமான மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ரத்த தானம் செய்ய வரிசையில் நின்றனர்.
மீட்புப் பணிகளை வலுப்படுத்திய பேரிடர் மீட்புக்குழு, காவல்துறை, தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். இரங்கல் தெரிவித்த உலகத் தலைவர்களின் வார்த்தைகள் துயரில் இருக்கும் குடும்பங்களுக்கு வலிமை தரும். உலகத் தலைவர்கள் அளித்த ஆதரவிற்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.