பாரத் நாட்டின் பிரதிநிதியாக அடையாளப்படுத்திக் கொண்ட பிரதமர் மோடி
- ஒவ்வொரு அதிபரின் முன்பாக நாட்டின் பெயர் அட்டை வைக்கப்படும்
- தங்கள் கூட்டணிக்கு அஞ்சி நாட்டின் பெயரையே மாற்றுவதாக எதிர்கட்சிகள் கூறின
வரும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நாட்டின் பெயர் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என பெயர் மாற்றம் செய்யப்படும் என ஒரு தகவல் சென்ற வாரம் வெளியாகியது. பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த தகவல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்ற போதிலும், அவ்வாறு பெயர் மாற்றம் வருவதை ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆதரித்தனர்.
ஆனால், இருபதிற்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை 2024 தேர்தலில் எதிர்க்கும் தலைவர்கள் கண்டனம் செய்துள்ளனர்.
இந்நிலையில், ஜி20 உறுப்பினர்கள் நாடுகளின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பெரும்பாலான உறுப்பினர் நாடுகளின் அதிபர்களும், பிரதிநிதிகளும் புது டெல்லிக்கு வந்தனர்.
அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட பிறகு, உச்சி மாநாடு இன்று காலை தொடங்கியது. இம்மாநாடு சம்பந்தமாக 'இந்தியா' எனும் பெயர் குறிப்பிடப்பட வேண்டிய பெரும்பாலான அதிகாரபூர்வ பதிவுகளிலும் 'இந்தியா' எனும் வார்த்தைக்கு பதிலாக 'பாரத்' எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மாநாட்டு மையத்தில் பாரத் மண்டபத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு உலக தலைவருக்கும் முன்பாக மேஜையில் அவரவர் நாட்டையும் குறிக்கும் விதமாக ஒரு அட்டை வைக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பாக உள்ள அட்டையில் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஜி20 உறுப்பினர் நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி சார்பில் ஒரு இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. இது குறித்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரபூர்வ அழைப்பிதழில் பாரத் நாட்டின் ஜனாதிபதி என குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டி சென்ற வாரமே எதிர்கட்சி தலைவர்கள் தொடங்கி வைத்த சர்ச்சை இன்னமும் ஓயவில்லை.
தற்போது பிரதமர் பாரத் நாட்டின் தலைவராக மாநாட்டில் அடையாளப்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி நாட்டின் பெயர் மாற்றம் உறுதியாகி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.
எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (I.N.D.I.A.) என பெயரிடப்பட்டதால், பா.ஜ.க. நாட்டின் பெயரையே மாற்ற துடிப்பதாக அக்கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.