இந்தியாவின் ஜனநாயகத்திற்காகப் போராடியவர் எல்.கே.அத்வானி- பிரதமர் மோடி
- இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
- வளர்ச்சிப் பணிகள் அதே வேகத்தில் தொடரும்.
பா.ஜ.க., மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பரம்பரை அரசியலுக்கு சவால் விட்டதாகவும், இந்தியாவின் ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தேசியவாத சித்தாந்தங்களுடன் இணைத்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது, 'முதலில் தேசம்' என்ற சித்தாந்தத்திற்குக் கிடைத்த மரியாதை" என்று கூறினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
எல்.கே. அத்வானி ஜனநாயகத்தை ஒரு கட்சியின் பிடியில் இருந்து விடுவிக்க தொடர்ந்து போராடினார். அனைவருக்கும் வழிகாட்டினார். அவர் பரம்பரை அரசியலை சவால் செய்தார். இந்தியாவின் ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தேசியவாத சித்தாந்தங்களுடன் இணைத்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், நாட்டின் ஏழை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். வளர்ச்சிப் பணிகள் அதே வேகத்தில் தொடரும். மோடியின் உத்தரவாதம் எல்லா நம்பிக்கைகளும் சரியும் இடத்தில் இருந்து தொடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.