இந்தியா

ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா, உத்தவ் தாக்கரே 

மகாராஷ்டிராவில் நீடிக்கும் அரசியல் நெருக்கடி- சிவசேனா பெயரில் புதிய அணியாக செயல்பட ஏக்நாத் ஷிண்டே திட்டம்

Published On 2022-06-25 21:25 GMT   |   Update On 2022-06-25 23:59 GMT
  • அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு, பால்தாக்கரே பெயரை பயன்படுத்த உத்தவ் தாக்கரே எதிர்ப்பு.
  • தடை கோரி, தேர்தலை ஆணையத்திடம் முறையீடு செய்ய சிவசேனா முடிவு.

மும்பை:

மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி நீடிக்கும் நிலையில், ஆதரவு அதிருப்தி எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில்  தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ள மகாராஷ்டிரா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா பாலாசாஹேப் என்ற பெயரில் புதிய அணியாக செயல்பட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து பேசிய அதிருப்தி எம்எல்ஏ தீபக் வசந்த் கேசர், தங்கள் முகாமில் இருந்து யாரும் சிவசேனாவை விட்டு வெளியேற மாட்டார்கள் என்றார். மேலும் வேறு எந்த கட்சியிலும் இணையும் திட்டமில்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.  தங்கள் அணிக்கு மகாராஷ்டிரா சட்டசபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளதாகவும், தங்கள் அணித் தலைவராக ஏக்நாத் ஷிண்டே இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு, சிவசேனா மற்றும் அதன் நிறுவனர் பால்தாக்ரேவின் பாலாசாஹேப் என்ற பெயரை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில்,கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால்தாக்கரேவும், சிவசேனாவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும், சிவசேனாவைத் தவிர, அவரது பெயரை யாரும் பயன்படுத்த முடியாது என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் குழு சிவசேனா மற்றும் பால்தாக்கரே பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்ககோரி, தேர்தல் ஆணையத்திடம் முறையிட, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார்.

இதனிடையே மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்க வதோதராவில் மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிசை, ஏக்நாத் ஷிண்டே சந்தித்ததாகவும், அவர்களது சந்திப்பு நடைபெற்ற போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வதோதராவில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மகாராஷ்டிராவில் தற்போது ஆட்சியில் உள்ள மகா விகாஸ் அகாடி அரசின் பிடியில் இருந்து சிவசேனா தொண்டர்களை விடுவிக்க தான் போராடுவதாகவும், இந்த போராட்டம் சிவசேனாக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Tags:    

Similar News