இந்தியா (National)

'ஒட்டுமொத்த தேசத்தின் செல்வத்தையும் குஜராத் பக்கம் திருப்பிய பிரதமர் மோடி' - பிரசாந்த் கிஷோர் அட்டாக்

Published On 2024-10-04 04:00 GMT   |   Update On 2024-10-04 04:19 GMT
  • 2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வியூகம் வகுத்துக்கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்
  • பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வமும் குஜராத் பக்கம் திரும்பியது.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது சொந்த மாநிலமான பீகாரில் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி அன்று ஜென் சுராஜ் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். பீகாரில் ஆளும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மீது கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வரும் பிரசாந்த் கிஷோர் பிரதமர் மோடி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

 

2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வியூகம் அமைத்து குஜராத் முதல்வராக இருந்த மோடி இந்தியப் பிரதமர் ஆவதில் முக்கிய பங்காற்றிய பிரசாந்த் கிஷோர் தற்போது மோடி குறித்து கூறியுள்ள கருத்துக்கள் கவனம் பெற்று வருகிறது.

கட்சி தொடக்க விழாவின்போது அவர் பேசியதாவது, குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடி நிறைய செய்திருக்கிறார் என்ற எண்ணத்தில்தான் அவரது பேச்சுகளைக் கேட்டு என்னைப் போன்றவர்கள் பாஜகவுக்கு வாக்களித்தோம்.

 

ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வமும் குஜராத் பக்கம் திரும்பியது. பீகார் மக்கள் வேலை வேறு மாநிலங்களுக்குப் படையெடுத்துச் செல்கின்றனர். குஜராத்தின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களித்தால் பீகார் மக்கள் எப்படி வளர்ச்சி பெற முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

Tags:    

Similar News