முதலில் தமிழக முதல்வரிடம் சொல்லுங்கள்: திருமாவளவனுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன்
- இந்திய அளவில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார்.
- உங்கள் அறிவுரைகளை முதலில் தமிழக முதல்வருக்கு வழங்குங்கள் என்றார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 47-ல் நாடு முழுவதும் போதைப் பொருள் சாராயத்தை முழுமையாக ஒழிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அளவில் இளம் தலைமுறையினர் பாழாகி வருவதை எண்ணி நான் வேதனை அடைகிறேன். ஒன்றிய அரசுக்கு அந்த வேதனை இருக்கிறதா என கேள்வி எழுப்ப விரும்புகிறேன். இந்தியா முழுவதும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன.
கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. ஆகவே, இந்திய அளவில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது எழுந்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தேசிய அளவில் போதை பொருள் ஒழிப்பை, மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்பதை வரவேற்கிறேன். அதேசமயம், திருமாவளவன் கூட்டணியில் உள்ள தி.மு.க. ஆளும் தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை அருந்தி 56 பேர் வரை உயிரிழந்துள்ளனர். உங்கள் அறிவுரைகளை முதலில் தமிழக முதல்வருக்கு வழங்குங்கள். தமிழகத்தில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது என காட்டமாகக் கூறினார்.
இதற்கு தி.மு.க, வி.சி.க. உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.