ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
- ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019, அக்டோபர் 31-ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்து வந்தது.
- சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட பிறகு நடந்த முதல் சட்டசபை தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019, அக்டோபர் 31-ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்து வந்தது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மாநாட்டு கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்த ஒமர் அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். விரைவில் புதிய முதலமைச்சராக ஒமர் அப்துல்லா பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான அக்டோபர் 31, 2019 தேதியிட்ட முந்தைய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகாலமாக செயல்பாட்டில் இருந்த உத்தரவை ரத்துசெய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.