இந்தியா

எங்க அப்பாவை சிறையில் தள்ளுங்க..! போலீசாரை அதிரவைத்த 5 வயது சிறுவன்

Published On 2024-08-21 02:41 GMT   |   Update On 2024-08-21 02:41 GMT
  • ஏமாற்றி காரியம் சாதிக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள் பல தாய்மார்கள்.
  • மத்திய பிரதேசத்தில்தான் அந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

இந்த காலத்துல குழந்தைகளை கண்டிக்கவும் முடியல.. தண்டிக்கவும் முடியல... அந்த அளவுக்கு படு சுட்டித்தனமாக இருக்கிறாங்க..

இது பல பெற்றோர்களின் புலம்பல்களாக இருக்கிறது. இதை பரிணாம வளர்ச்சி என்பதா அல்லது நவநாகரிக மாற்றத்தின் விளைவுகள் என்பதா என்றே தெரியவில்லை.

முன்பெல்லாம் நிலவைக்காட்டியும், பாட்டிகதை, ராஜா கதைகளையும் சொல்லியும் சோறூட்டினார்கள். இப்போது வீடியோ கேம்களை காண்பித்தும், செல்போன்களை கையில் கொடுத்தும் ஏமாற்றி காரியம் சாதிக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள் பல தாய்மார்கள்.

அதேபோல் குழந்தைகள் தவறு செய்தால் தைரியமாக தண்டித்த காலமும் இருந்தது. ஆனால் இப்போது தண்டிக்க முடியவில்லை. தவறை சுட்டிக்காட்டினாலே பல குழந்தைகள் பெற்றோருடன் சண்டையிட்டுக்கொண்டு பேசாமல் இருந்துவிடுகிறார்கள்.

அல்லது தாய்-தந்தையை பற்றி தாத்தா, பாட்டிகளிடம் போட்டுக்கொடுக்கும் சேட்டைகளை செய்துவிடுகின்றனர் என்பது இன்னும் சிலரது ஆதங்கங்கள்.

இது என்ன பிரமாதம்..? ஒரு சிறுவன் தன்னை திட்டிய தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்துக்கே சென்றுவிட்டான் என்றால் நம்ப முடிகிறதா... நம்பித்தான் ஆகவேண்டும்.

மத்திய பிரதேசத்தில்தான் அந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அந்த மாநிலத்தின் தார் மாவட்டத்தை சேர்ந்த பாக்னெர் போலீஸ் நிலையத்துக்கு அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் சென்றான்.

தன்னந்தனியாக வந்த சிறுவனை பார்த்து அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஏதோ வழிதவறி வந்துவிட்டானோ என்று முதலில் நினைத்தார். பின்னர் அவனை நாற்காலியில் அமரவைத்து பேச்சுக்கொடுத்தபிறகே அவன் வந்த நோக்கம் அவருக்கு தெரிந்தது.

சிறுவனது கொஞ்சும் மழலைப்பேச்சு ரசிக்க வைத்தாலும், அவன் சொன்ன விஷயங்கள் அவரை அதிர்ச்சியடையவைத்தது. ``சார், என் பேரு ஹசானைன். எங்க அப்பா இக்பால். அவர் என்னை அடிக்கடி திட்டுறாரு, ரோடு பக்கம் போகக்கூடாது, ஆற்றங்கரைக்கு போகக்கூடாதுன்னு கண்டிஷன் போடுறாரு.

எனக்கு தொந்தரவு கொடுக்கிறாரு, என்னை அடிக்கவும் செய்யறாரு. அவர் மேலே நடவடிக்கை எடுக்கணும். அவரை கைது செய்து சிறையில் தள்ளுங்க..'' என்று தனது புகாரை அடுக்கிக்கொண்டே போனான் அந்த சிறுவன்.

கோபத்தில், கொதிக்கும் பால் போல் பொங்கிய அவனை போலீசார் சிரித்துப்பேசி சமாதானப்படுத்தினார்கள். அதன்பிறகு அவனை வீட்டுக்கு அழைத்துச்சென்று அவனது தாயாரிடம் ஒப்படைத்தனர்.

அந்த நேரத்தில் அவனது தந்தை இக்பால் வீட்டில் இல்லை. வியாபாரத்துக்காக வெளியூருக்கு சென்றிருந்தார். அவரிடம் போலீசார் செல்போனில் பேசி நடந்ததை கூறி, மகனிடம் கண்டிப்போடு நடக்காதீர்கள். அன்பாக அறிவுரை சொல்லுங்கள், என்று அறிவுரை கூறினர்.

சிறுவனிடமும், தினமும் பள்ளிக்கு ஒழுங்காக செல், குறும்பு செய்யக்கூடாது, தாய்-தந்தை சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என்று கனிவோடு கூறிவிட்டு சென்றனர், போலீசார்.

இதற்கிடையே சிறுவனின் வேடிக்கையான புகாரை ரசித்த போலீஸ் நிலையத்தில் இருந்த சிலர் அதை செல்போனில் பதிவு செய்து வலைத்தளத்தில் பரவவிட்டனர். அது தற்போது படுவேகமாக உலா வருகிறது.

இதை பலரும் திரும்ப திரும்ப பார்ப்பதால் அதிக லைக்குகளை குவிக்கும் வீடியோவாக அது மாறிவிட்டது.

இதுதொடர்பாக சிறுவனின் தந்தைக்கும் சிலர் செல்போனில் பேசி அவனுக்கு ஆதரவாக வரிந்துகட்டிக் கொண்டு வசைபாடவும் செய்கிறார்களாம். அவர்களுக்கு பதிலளித்து முடியவில்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறாராம் அவனது தந்தை.

Tags:    

Similar News