ஜெகன்மோகன் ரெட்டி உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
- பி.வி.சுனில் குமார், பி.எஸ்.ஆர்.ஆஞ்சநேயுலு மற்றும் பிற போலீஸ் அதிகாரிகள் தன்னை பெல்ட்கள் மற்றும் தடிகளால் தாக்கினர்.
- தனக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரிந்தும் என்னை தாக்கினர்.
ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டி மற்றும் 2 முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 பேர் மீது தெலுங்குதேச கட்சியின் எம்எல்ஏ அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் தனக்கு எதிராக கிரிமினல் சதித்திட்டம் தீட்டியதாக உண்டி எம்எல்ஏ கே ரகுராம கிருஷ்ண ராஜு தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது புகாரில், 2021-ம் ஆண்டில் ஐதராபாத்தில் சிஐடி என்னை கைது செய்தது. அப்போது ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பிற அதிகாரிகள் தனக்கு எதிராக ஒரு கிரிமினல் "சதி" திட்டம் தீட்டினர்.
மே 14, 2021 அன்று, நான் முறையான நடைமுறையின்றி கைது செய்யப்பட்டேன். என்னை கொடுமைப்படுத்தினர். அதுமட்டும் இல்லாமல் சட்டவிரோதமாக போலீஸ் வாகனத்திற்குள் இழுத்துச் சென்றனர். அதே இரவில் வலுக்கட்டாயமாக குண்டூருக்கு கொண்டு சென்றனர்.
பி.வி.சுனில் குமார், பி.எஸ்.ஆர்.ஆஞ்சநேயுலு மற்றும் பிற போலீஸ் அதிகாரிகள் தன்னை பெல்ட்கள் மற்றும் தடிகளால் தாக்கினர். இதய நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள கூட அனுமதிக்கவில்லை. தனக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அதிகாரிகளுக்குத் தெரியும்.
இது தெரிந்தும் சில அதிகாரிகள் எனது மார்பில் அமர்ந்து என்னை கொல்லும் முயற்சியில் அழுத்தம் கொடுத்தனர். மேலும் எனது தொலைபேசியை எடுத்துச் சென்று அதன் பாஸ்வேடை கூறுமாறு தாக்கினர்.
அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். அங்கு மருத்துவர் பிரபாவதி எனக்கு மோசமாக சிகிச்சை அளித்தார். காவல்துறை அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் மருத்துவர் போலி மருத்துவ சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், அப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சித்தால் கொலை செய்து விடுவதாக பிவி சுனில் குமார் மிரட்டினார்.
இந்த வழக்கில் குண்டூர் அரசு பொது மருத்துவமனையின் முன்னாள் கண்காணிப்பாளர் பிரபாவதி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி விஜய் பால் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.