கருப்பு உடை அணிந்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
- ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.
- பாராளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
புதுடெல்லி:
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பெரும்பாலானோர் இன்று பாராளுமன்றத்திற்கு கருப்பு உடையில் வந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். அத்துடன், பாராளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அதானி விவகாரம், ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.